இலங்கையில் ராமகிருஷ்ண மிஷன் பணிகள் பற்றிய ஒரு நோக்கு

 


மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் 1926ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை 100 ஆண்டுகளாக ஆன்மீகம், கல்வி, மருத்துவம், சமூக சேவை என பல்வேறு துறைகளில் அளப்பரிய சேவையாற்றி வருகிறது.

அதன் பணிகள் பற்றிய ஒரு தொகுப்பு:

*1. கல்விப் பணிகள்:
ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம் மற்றும் சாரதா மகளிர் இல்லத்தில் 120 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். உயர்தர வகுப்பு மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பார்வைக் குறைபாடுடைய மாணவர்களுக்கு உயர் கல்விக்கான புலமைப்பரிசில் திட்டம் வழங்கப்படுகிறது.

சாரதா பாலர் பாடசாலை (ஆரம்பம் 1972), விவேகானந்தா பாலர் பாடசாலை (ஆரம்பம் 1997) ஆகியன சிறுவர்களின் ஆரம்பக் கல்விக்கு வித்திடுகின்றன.

*2. நலன்புரி நிலையங்கள்:
சாரதா நலன்புரி நிலையம் காரைதீவில் மருத்துவ நிலையம், கணினி பயிற்சி நெறி, யோகாசனம், சத்சங்கம், கிராமங்களுக்கான மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதேபோல் விவேகானந்தா நலன்புரி நிலையம் கிரானில் ஞாயிற்றுக்கிழமைகளில் மருத்துவ முகாம்கள், அறநெறிப் பாடசாலை நடைபெறுகின்றன.

*3. சமூக மேம்பாடு:
ஜீவானானந்த சமூக சேவைத் திட்டத்தின் கீழ் எல்லைப்புற கிராம மக்களின் மேம்பாட்டு நலத் திட்டங்கள், பொதுநல நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. விவேகானந்த மனிதவள மேம்பாட்டு நிலையம் மட்டக்களப்பு மற்றும் காரைதீவில் இயங்குகிறது.

*4. சிறப்பு சேவைகள்:
மட்டக்களப்பில் IRTC விழிப்புலனற்றோருக்கான நவீனமயமாக்கப்பட்ட பயிற்சி நிலையம் இயங்குகிறது. இங்கு பிரெயில் புத்தகங்கள், ஒலி புத்தகங்கள் மற்றும் விழிப்புலனற்றோருக்கான கணினி பயிற்சி வழங்கப்படுகிறது.

ஆன்மீக புத்தக நிலையத்தில் சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர், பெரியவர்களுக்கான ஆன்மீக நூல்கள் உள்ளன.

*5. ஆன்மீக, கலாசாரம்:
ஆஷ்ரமத்தில் அமைந்துள்ள திருக்கோவிலில் நித்திய பூஜை, சிறப்பு நாட்களில் பஜனை நிகழ்வுகள், சத்சங்கம், ஐக்கிய வணக்கம் மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.

ராமகிருஷ்ண மிஷன் விவசாயப் பண்ணை உறுகாமத்தில் இயங்குகிறது. ஞாயிறு சமய பாடசாலைகள் மட்டக்களப்பு, கிரான் மற்றும் எல்லைப்புற கிராமங்கள் உட்பட சுமார் 400 மாணவர்கள் பயில்கின்றனர்.

*6. மருத்துவ சேவை:
தர்ம வைத்தியசாலை மற்றும் மருத்துவ முகாம் மூலம் மருத்துவ நிலையம், ஆய்வுகூட பரிசோதனைகள் மற்றும் மாதாந்தம் 12 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.

*எதிர்கால திட்டம்:*
*VIKAS – விவேகானந்தா கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு நிலையம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

100 ஆண்டுகளாக மக்கள் பணியே மகேசன் பணி என்ற தாரக மந்திரத்துடன் சேவையாற்றும் ராமகிருஷ்ண மிஷனின் பணிகள் தொடர வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனை.

வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு.