மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் ‘திவியட சவியக்’ திட்டத்தின் கீழ் வீட்டிற்கு அடிக்கல் நாட்டல்!



















வீடற்ற நலிவுற்ற சிறுவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு தலா 20 இலட்சம் ரூபாய் பெறுமதியில் வீடுகள்

மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் பகுதியில், வீடற்ற மற்றும் நலிவுற்ற சிறுவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் ‘திவியட சவியக்’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், பயனாளி குடும்பம் ஒன்றிற்கான வீட்டிற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (09.10.2026) இடம்பெற்றது.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சத்துருக்கொண்டான் கிராம உத்தியோகத்தர் பிரிவில் இந்த ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வீட்டிற்கான அடிக்கல் சம்பிரதாயபூர்வமாக நாட்டி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சத்துருக்கொண்டான் கிராம உத்தியோகத்தர், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவைச் சேர்ந்த சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர், பயனாளிச் சிறுவரின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இத்திட்டத்தின் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் மூன்று பயனாளிச் சிறுவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பற்ற சூழலில் வாழும், வறுமையால் பாதிக்கப்பட்ட மற்றும் போதிய வீட்டுவசதியற்ற குடும்பங்களுக்கு நிலையான வீட்டு வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதே இந்நிகழ்ச்சித் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

‘வளமான நாடு, அழகான வாழ்க்கை, பாதுகாப்பான சிறுவர் சமுதாயம்’ என்ற இலக்கை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படும் இத்திட்டம், பாதுகாப்பான வாழ்விடமின்றித் தவிக்கும் சிறுவர்களையும் அவர்களது குடும்பங்களையும் வலுப்படுத்தும் முயற்சியாக அமைந்துள்ளது.