இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் பிரதிநிதிகள் இந்திய நிதியமைச்சருடன் சந்திப்பு!










இந்திய மத்திய நிதியமைச்சர் மாண்புமிகு திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்களை இலங்கைத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க தமிழ்ப் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் புதுடெல்லியில் உள்ள நிதி அமைச்சு அலுவலகத்தில் 28.10.2026 புதன்கிழமை மரியாதை நிமிர்த்தமாகச் சந்தித்துக் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் திரு.ம.வெங்கடேசன் அவர்களின் ஒருங்கிணைப்பில் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

​​இச்சந்திப்பின் போது, தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத் அவர்களினால், குறிப்பாக தமிழ் மக்களின் வரலாற்று மற்றும் ஆன்மீக அடையாளமான பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருகோணேஸ்வரர் ஆலய விடயம், இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமைகள், அரசியல் தீர்வு மற்றும் சமகால அரசியல் சூழல், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தமிழ்நாட்டின் முகாம்களில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களின் சமூக நலன் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் நிதியமைச்சரிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

​இக் கோரிக்கைகளை கேட்டறிந்த மத்திய நிதியமைச்சர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலனுக்காகவும் வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும் இதுவரை மேற்கொண்டுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.

​அத்துடன், இலங்கைத் தமிழ் மக்களின் எதிர்காலத் தேவைகளைக் கருத்திற் கொண்டு, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய அரசு தொடர்ந்து செய்து தரும் என உறுதியளித்தார்.

​​இச் சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் திரு.ம.வெங்கடேசன், ஆஸ்திரேலியத் தமிழ் காங்கிரஸின் தலைவர் திரு.கிருஷ்ணபிள்ளை இளங்கோ, அதன் முன்னாள் தலைவர் திரு.மனோகரன் மாணிக்கவிநாயகம் மற்றும் அமெரிக்கத் தமிழர் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் திரு.லவன் முத்து ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.