வாகரையில் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு வலுவூட்டல் கருத்தரங்கு! – முழுமையான நிதி அனுசரணையை வழங்கிய வைத்தியர் திருமதி காந்தா நிரஞ்சன்




















மட்டக்களப்பு – வந்தாறுமூலை 'தாயக ஊற்று' அமைப்பின் ஏற்பாட்டில், அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் இளையதம்பி சிறிநாத் அவர்களின் வழிகாட்டலிலும், அமைப்பின் தலைவர் திரு.கா.இராமச்சந்திரன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கோறளைப்பற்று வடக்கு வாகரை கல்விக் கோட்டத்தைச் சேர்ந்த கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்,​கட்டுமுறிவுக்குளம் அ.த.க. பாடசாலை, ​பால்சேனை தமிழ் மகா வித்தியாலயம்,​வம்மிவட்டவான் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள தெரிவுசெய்யப்பட்ட சுமார் 115 மாணவர்களின் கணிதப் பாட அடைவு மட்டத்தை உயர்த்தும் நோக்கில் விசேட வலுவூட்டல் கருத்தரங்கு 26.10.2026 இன்றைய தினம் காலை கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. அத்துடன், அமைப்பின் உறுப்பினரும் சமூக ஆர்வலருமான வைத்தியர் திருமதி காந்தா நிரஞ்சன் இந் நிகழ்வுக்கான முழுமையான நிதி அனுசரணையை வழங்கியிருந்தார். ​இக் கருத்தரங்கு மங்கல விளக்கேற்றல், மௌன இறை வணக்கம், தலைமையுரை மற்றும் அதிதிகளின் உரைகளுடன் ஆரம்பமானது. ​இதனைத் தொடர்ந்து, பிரபல வளவாளர் திரு.த.அகில்ராஜ் அவர்களால் மாணவர்களுக்கான விசேட கணிதப் பாட வழிகாட்டல்களும் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. மாணவர்களின் கற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், கடந்த கால வினா-விடை கையேடுகள் மற்றும் அவசியமான கற்றல் கோப்புகள் என்பனவும் இதன்போது மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன. ​​இந் நிகழ்வில் சமூக ஆர்வலரும் தாயக ஊற்று அமைப்பு உறுப்பினருமான வைத்தியர் திருமதி காந்தா நிரஞ்சன், ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினரும் தாயக ஊற்று அமைப்பின் உப தலைவருமான திரு.த.பிரபாகரன், ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினரும் தாயக ஊற்று அமைப்பின் உறுப்பினருமான திரு.கா.நாகேந்திரன், கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை உறுப்பினரும் தாயக ஊற்று அமைப்பின் உறுப்பினருமான திரு.இ.சிவேந்திரன், கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலய அதிபர், சமூக ஆர்வலரும் தாயக ஊற்று அமைப்பு உறுப்பினருமான திருமதி சர்மி உதயகுமார், சமூக ஆர்வலரும் தாயக ஊற்று அமைப்பு உறுப்பினருமான திரு.கி.சந்திரகுமார், கதிரவெளி கிராம அபிவிருத்திச் சங்கச் செயலாளரும் தாயக ஊற்று அமைப்பின் உறுப்பினருமான திரு.குகதாசன், தாயக ஊற்று அமைப்பு உறுப்பினர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.