- ரீ.எல். ஜவ்பர் கான் மட்டக்களப்பு
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் எண்ணக்கருவில் உருவான "முழு நாடும் ஒன்றாக" எனும் போதையற்ற சமூகத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு பொலிஸ் பயிற்சி கல்லூரியில் அமைந்துள்ள போதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு நிலையத்தில் புதிய நூலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கல்லடியில் இயங்கி வரும் பொலிஸ் பயிற்சி கல்லூரி வளாகத்தில், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான குறுகிய கால புனர்வாழ்வு பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது.
இங்கு தமிழ் மொழி மூலம் 30-க்கும் மேற்பட்டோருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றது. புனர்வாழ்வு பெறும் நபர்களின் அறிவினை வளர்த்துக்கொள்ளவும், அவர்களின் சிந்தனை மேம்பாட்டிற்காகவும் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட இந்த நூலகத்தை, நேற்று மாலை மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
இச்சிறப்பு நிகழ்வில், பொலிஸ் பயிற்சி கல்லூரியின் பொறுப்பதிகாரி, காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். அழககோன், மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் வைரமுத்து தினேஷ்குமார், தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை அதிகாரிகள் மற்றும் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு ஆயுர்வேத வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நூலகத்தின் மூலம், போதை
பாவனைக்கு அடிமையாகிப் புனர்வாழ்வு பெற்று வருபவர்கள் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தி, உளரீதியாகவும் அறிவுரீதியாகவும் பெரிதும் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
.jpeg)

.jpeg)






