மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குருதிப் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் நோக்கில் பழுகாமத்தில் இரத்ததான முகாம்!
















மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் குருதிப் பற்றாக்குறையை ஓரளவேனும் நிவர்த்தி செய்யும் நோக்கில், பழுகாமம் சூட்டிங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் ஒன்று இன்று நடைபெற்றது.

“ஒரு துளி குருதி – ஒரு உயிரின் நம்பிக்கை” எனும் தொனிப்பொருளில், இன்று 2026 ஒக்டோபர் 25ஆம் திகதி பழுகாமம் பிரதேச வைத்தியசாலையில் இம்முகாம் நடைபெற்றது.

கழகத்தின் தலைவர் திரு. த. குகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் கலந்துகொண்டு இரத்தத்தைச் சேகரித்தனர்.

விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள், சத்திரசிகிச்சைகளுக்கு உட்படும் நோயாளர்கள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவத் தேவைகளுக்காகக் குருதி தேவைப்படும் நோயாளர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதில் இரத்ததானம் முக்கிய பங்கு வகிக்கின்றது.

இதனைக் கருத்திற்கொண்டு, வைத்தியசாலையின் குருதித் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், தன்னார்வ இரத்ததானம் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கும் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இளைஞர்களின் சமூகப் பொறுப்புணர்வையும் மனிதநேயச் சேவையையும் வெளிப்படுத்தும் வகையில், பழுகாமம் சூட்டிங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் முன்னெடுத்த இம்முயற்சி பாராட்டத்தக்கதாகும்.