இந்தியாவின் பிரபல சமையற்கலை நிபுணர் செஃப் தாமு என்று அழைக்கப்படும் கே.தாமோதரன் தனது 72 வயதில் உடல்நலக் குறைவால் இன்று (25) ஞாயிற்றுக்கிழமை காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்றையதினம் காலமாகியுள்ளார்.
தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமான சமையல் கலைஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் செஃப் தாமு.
குறிப்பாக, தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகள் மற்றும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான இரசிகர்களைப் பெற்றார்.
தனது நகைச்சுவையான பேச்சு, சமையல் மீதான ஆர்வம், போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் விதம் எனத் தனக்கெனத் தனி இரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருந்தார்.
கடந்த 2010 ஆம் ஆண்டில், 24 மணி நேரம் 30 நிமிடங்கள் 12 வினாடிகளில் 617 விதமான உணவு வகைகளைத் தயாரித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
சமையல் கலையில் இவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பின் காரணமாக பத்மஸ்ரீ விருது வழங்கி இந்திய அரசு கௌரவப்படுத்தியுள்ளது.
உணவக முகாமைத்துவம், சமையல் கலைத் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியச் சமையல் நிபுணர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





