“வளமான நாடு – அழகான வாழ்வு” எனும் தேசிய செயற்திட்டத்திற்கு அமைவாக, மட்டக்களப்பு மாநகர சபையில் உள்ளூராட்சி வாரம் – 2026 இன் இறுதி நாள் நிகழ்வு மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான ஜே. எஸ். அருள்ராஜ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
“புதிய நகரத்தைப் புத்துயிர் பெறச் செய்தல்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், மக்களுக்கான நடமாடும் சேவை, மரநடுகை, விளையாட்டுப் பயிற்சிகள், சிரமதான நிகழ்வுகள், பாடசாலை மாணவர்களுக்கான போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
உள்ளூராட்சி மன்ற கீதத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில், மங்கள விளக்கேற்றலும் மாணவர்களின் பாரம்பரிய நடன நிகழ்வுகளும் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண மட்டத்திலான தரப்படுத்தலில் மட்டக்களப்பு மாநகர சபை இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், “ ஒரு பிரதேசத்தின் வளர்ச்சிக்கு உள்ளூராட்சி மன்றம் பிரதானமானது” எனும் தலைப்பில் நடைபெற்ற விவாதப் போட்டியில் மட்டக்களப்பு புனித சிசிலியா மகளிர் பாடசாலை மாணவிகள் முதலாம் இடத்தைப் பெற்றனர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ. டி. எம். ரஃபீக் சிறப்பு அதிதியாகவும், மாநகர சபையின் பிரதி முதல்வர் வை. தினேஸ்குமார், மாநகர சபை உறுப்பினர்கள், பிரதி ஆணையாளர் தேவநேசன், மருத்துவர்கள், பிரதம கணக்காளர், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





