கைதிகளைச் சிறைச்சாலைகளில் அடைத்து வைப்பதற்குப் பதிலாக வீடுகளிலேயே தடுத்து வைப்பதற்கான புதிய சட்ட திருத்தப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (01) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
நீதித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவான மறுசீரமைப்புகளின் ஒரு அங்கமாகவே இத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இதன் முக்கிய அம்சங்களாகப் பின்வருவனவற்றைக் சுட்டிக்காட்டினார்:
சிறைச்சாலைகளின் நெருக்கடியைக் குறைக்கும் நோக்கில் கைதிகளைச் சிறைகளில் அடைப்பதற்குப் பதிலாக வீடுகளிலேயே தடுத்து வைத்து தண்டனைக் காலத்தைக் கழிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. இதனுடன் இணைந்து நீதித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவான மறுசீரமைப்புகளின் கீழ் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை விரைவுபடுத்தவும், பிணை பெற முடியாதவர்களுக்குப் பிணை வழங்குவதற்கான சட்ட நடைமுறைகளை எளிதாக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்த நீதித் துறை சீர்திருத்தச் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.





