UNDP மற்றும் GEF நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் இரசாயன மற்றும் சுகாதாரக் கழிவு முகாமைத்துவ கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில், UNDP சுயாதீன மதிப்பீட்டாளர் கியாகோமோ மோரளி பங்கேற்புடன் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (04) நடைபெற்றது.
இதன்போது கொடுவாமடு திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையங்களில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன்
மருத்துவ மற்றும் தொற்றுக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்றுவதில் எதிர்நோக்கப்படும் சவால்கள், நிலையங்களில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை, வளங்களின் தேவை, நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளின் பற்றாக்குறை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் துறைசார் நிபுணர்களுடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
பொதுமக்களின் சுகாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வகையில் கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
இதனடிப்படையில், திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தின் செயற்பாடுகளை மேம்படுத்துதல், மருத்துவ மற்றும் தொற்றுக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவதற்கான தொழில்நுட்ப மற்றும் வள வசதிகளை ஏற்படுத்துதல், ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் போன்ற பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் ,கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் , மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், வைத்திய அதிகாரிகள், உள்ளூராட்சி ஆணையாளர், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.





