
கிரான்குளம் கடற்பரப்பில் நேற்று (4) இடம்பெற்ற படகு விபத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மீனவர் சங்கத் தலைவர் ஒருவர் காணாமல்போயுள்ளார். மேலும், மற்றுமொரு மீனவர் நீந்தி கரைசேர்ந்து உயிர் தப்பியுள்ளார்.
கிரான்குளம் கடற்பரப்பில் நேற்று முற்பகல் சுமார் 11 மணியளவில் மூன்று மீனவர்கள் தோணியொன்றில் மீன்பிடித் தொழிலுக்காகக் கடலுக்குச் சென்றுள்ளனர்.
இதன்போது, திடீரென ஏற்பட்ட பாரிய அலையில் சிக்கிய தோணி கட்டுப்பாட்டை இழந்து கடலில் தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் மூவரும் கடலில் வீழ்ந்துள்ளனர்.
கிரான்குளம் செல்லத்தம்பி வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய, ‘நாகேந்திரன்’ என அழைக்கப்படும் துரைராஜா முத்தையா என்ற மீனவர் சங்கத் தலைவர் இதுவரை காணாமல்போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, விஷ்ணு கோவில் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய அமரசிங்கம் பரமலிங்கம் என்ற மீனவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தோணியில் பயணித்த 45 வயதுடைய செல்வகுமார் என்ற மீனவர் கடும் அலைகளுக்கு மத்தியில் நீந்திப் போராடி கரையை அடைந்து உயிர் தப்பியுள்ளார். காயமடைந்த அவர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காணாமல்போயுள்ள மீனவர் சங்கத் தலைவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடற்படையினர், சக மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




