அரச தாதியக் கல்லூரிகளுக்கு ஓய்வுபெற்ற விரிவுரையாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம்!

 



- தாதியர் பற்றாக்குறையையும் கல்வித் தேவைகளையும் தீர்க்க அவசர மாற்று வழி அறிமுகம்
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ், ஆரம்ப தாதிப் படிப்புக்கு பிந்தைய கல்வி நிறுவனங்கள் உட்பட 17 தாதியக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் 2026.03.31 நிலவரப்படி தரம் I மற்றும் அதற்கு மேற்பட்ட தரம் கொண்ட தாதி (கல்வி) உத்தியோகத்தர் பதவிகளில் 142 வெற்றிடங்கள் காணப்பட்டன.
அத்துடன், 2025.12.31 முதல் விசேட தர தாதி (கல்வி) பதவி வெற்றிடங்களின் அடிப்படையில் மேலும் 24 உத்தியோகத்தர்கள் பதவி உயர்வு பெறவுள்ளதால், மொத்தமாக 166 பதவி வெற்றிடங்கள் நிலவுகின்றன. மேலும் 24 விசேட தர தாதி (கல்வி) பதவி வெற்றிடங்களும் காணப்படுகின்றன.
தற்போது இந்தத் தாதியக் கல்லூரிகளைத் தாதியர் பீடங்களாக மாற்றி, தாதி டிப்ளோமா படிப்பை பட்டப்படிப்பாகத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், தரம் I மற்றும் அதற்கு மேற்பட்ட தரம் கொண்ட உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பயிற்சி நியமனங்கள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
இதனால், நிலவும் பற்றாக்குறையை முறையாக நிரப்பும் வரை, அரச தாதியக் கல்லூரிகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற தாதி விரிவுரையாளர்கள் மற்றும் முப்படைகளின் தாதியக் கல்லூரிகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற அல்லது சட்டபூர்வமாக விலகிய தாதி விரிவுரையாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்காகச் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.