பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதிப் பீடத்தில் உயர் டிப்ளோமா கற்கைநெறி மாணவர் ஒருவரால் தாக்கல்

 


லோரன்ஸ் செல்வநாயகம்தினகரன் 

 கொழும்பு பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர், முன்னாள் துணைவேந்தர் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எட்டு பேரை எதிர்வரும் செப்டம்பர் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதிப் பீடத்தில் உயர் டிப்ளோமா கற்கைநெறியைத் தொடர்ந்த மாணவர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைகளுக்காகவே இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவர், பரீட்சை நடவடிக்கைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளால் தமக்கு ஏற்பட்ட கால இழப்பு மற்றும் ஏனைய பாதிப்புகளுக்காக 50 இலட்சம் ரூபா நஷ்டஈடு கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

நுகேகொடை மாவட்ட நீதிபதி ஆர்..என். ராஜபக்சவின் உத்தரவின் அடிப்படையில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் மற்றும் முன்னாள் துணைவேந்தர் உள்ளிட்ட எட்டு பேருக்கும் நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குறித்த உயர் டிப்ளோமா கற்கைநெறியின் சில பாடங்களில் மாணவர்கள் சித்தியடையவில்லை என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், சில நாட்களுக்குப் பின்னர் அதே மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டமை தொடர்பிலும் மனுதாரர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

எந்தவொரு மீள் பரீட்சையும் நடத்தப்படாத நிலையில், சித்தியடையாத மாணவர்கள் பின்னர் எவ்வாறு சித்தியடைந்தவர்களாக அறிவிக்கப்பட்டனர் என்பது தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட வேண்டுமெனவும் அவர் தனது மனுவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பரீட்சை வினாத்தாள்கள் கசிந்தமை, புள்ளிகள் வழங்கும் நடைமுறையில் முறைகேடுகள் இடம்பெற்றமை மற்றும் இலஞ்சம் கோரப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளும் மனுதாரரால் முன்வைக்கப்பட்டுள்ளன.