மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரைக்கு மீன் கொள்வனவு செய்ய சென்றவர் மீது தாக்குதல் .

 




மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரைப் பகுதியில் மீன் கொள்வனவு செய்வதற்காகச் சென்ற தாம், சட்டவிரோத சுருக்குவலை மூலம் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படும் குழுவினரால் தாக்கப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்டவர் கவலை தெரிவித்துள்ளார்.

கடந்த 16ஆம் திகதி கடற்கரைக்குச் சென்றிருந்தபோது, ஜீவன் என்பவருடன் ஏற்பட்ட வாய்த்தகராரைத் தொடர்ந்து, தம்மைச் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

தாம் சட்டவிரோத சுருக்குவலை மூலம் மீன்பிடி நடவடிக்கைகள் இடம்பெறுவது தொடர்பில் தகவல் வழங்கக்கூடும் என்ற சந்தேகத்தில், தம்மை அங்கு வந்த நபர் ஒருவர் கேள்வி எழுப்பியதுடன், பின்னர் சிலரை அழைத்து வந்து தாக்கியதாகவும் கோபிநாத் தெரிவித்தார்.

தாக்குதலில் காயமடைந்த நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்று வீட்டை அடைந்ததாகவும், பின்னர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், குறித்த பகுதியில் சட்டவிரோத சுருக்குவலை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

எனவே, தம்மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நபர்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.