மட்டக்களப்பில் 5 கொலைச் சம்பவங்கள்: பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 13 வரை விளக்கமறியல்

 



மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் எனக் குறிப்பிடப்படும் மொஹமட் சிபான் மற்றும் மொஹமட் சகீத் ஆகிய இருவரும் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பிலேயே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், காத்தான்குடியில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் வவுணதீவு – கரையாக்கன்தீவு பகுதியில் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆகியவை இதில் அடங்குகின்றன.

குறித்த ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு இன்று (29) திறந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மொஹமட் சிபான் மற்றும் மொஹமட் சகீத் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். பிள்ளையான் காணொளி தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கின் விசாரணைகளைத் தொடர்ந்து, பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அதேவேளை, இவ்வழக்கின் மற்றுமொரு சந்தேகநபரான மொஹமட் பாய்ஸ் எனப்படும் ‘பொலிஸ் பாய்ஸ்’, தற்போது லண்டனில் இருப்பதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், அவருக்கு எதிராக மீண்டும் பிடியாணை பிறப்பிக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.