மாணவர்களுக்கு மஹாபொல உயர் கல்விப்புலமைப்பரிசில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 28ஆம் திகதி அலரி மாளிகையில்!

 


மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 2024/2025 கல்வியாண்டுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள மாணவர்கள், புலமைப்பரிசில் சான்றிதழை பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் 28ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெறவுள்ள நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாதது என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

பங்களிப்பாலும் அரச வரிப்பணத்தாலும் முன்னெடுக்கப்படும் மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் திட்டத்தை அரசியல் காட்சிப்படுத்தலாக பயன்படுத்துவதற்கும், பொருளாதார சிரமங்களை எதிர்கொள்ளும் மாணவர்களை நிகழ்வில் பங்கேற்க கட்டாயப்படுத்துவதற்கும் அரசாங்கத்துக்கு உரிமையில்லை என ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் காரியாலயத்தில் புதன்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுஷான் சந்திரஜித் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

2024/2025 கல்வியாண்டுக்கான மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் திட்டத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான நிகழ்வு எதிர்வரும் செப்டெம்பர் 28ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டு புலமைப்பரிசில் சான்றிதழை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அழைப்பிதழ்கள் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அவற்றை கொண்டு வருமாறும், காலை 8 மணிக்கு முன்னர் வருகை தருமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மாணவர்களின் வீடுகளுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் திட்டத்துக்கு உரித்துடையவராக வேண்டுமாயின் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பதிவு செய்து சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு பெற்றுக்கொள்ளத் தவறினால் புலமைப்பரிசில் நன்மையை வழங்க முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் அலரி மாளிகைக்கு வந்து பிரதமர் ஹரிணி அமரசூரியவின் உரையை கேட்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் திட்டத்தின் பின்னணியை பார்க்கவேண்டும். 1960 மற்றும் 1970களில் பல்கலைக்கழக மாணவர் இயக்கங்களும் இலவசக் கல்விக்காக போராடிய மக்களும், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படவேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர். 

போராட்டங்களும் மக்கள் அழுத்தமும் உருவாக்கிய பின்னணியிலேயே 1980களில் மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட இந்த நிதிக்கு திறைசேரியும் பங்களிக்கிறது.

எனவே, மக்கள் பங்களிப்பாலும் வரிப்பணத்தாலும் நடத்தப்படும் நிதியை அரசியல் நிகழ்வுகளுக்கு பயன்படுத்தக்கூடாது. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பழைய அரசியல் கலாசாரத்தை மாற்றுவதாகவும், கல்வி நிறுவனங்களை அரசியல் பிரசாரங்களுக்கு பயன்படுத்தப்போவதில்லை என்றும் கூறியது. ஆனால் தற்போது பல்கலைக்கழக மாணவர்களையும் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தும் முயற்சி இடம்பெறுகிறது.

முன்னைய அரசாங்கங்களின் காலத்திலும் இதுபோன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றன. எஸ்.பி. திஸாநாயக்க உயர்கல்வி அமைச்சராக இருந்த காலத்தில், மஹாபொல உதவித்தொகை பெறும் மாணவர்களை கொழும்புக்கு அழைத்து அரசியல் நிகழ்வு நடத்தப்பட்டது. தற்போது மாற்று அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதாக கூறிய அரசாங்கமும் அதே நடைமுறையை பின்பற்றுகிறது.

தொலைதூர பகுதிகளில் இருந்து கொழும்புக்கு வருவதற்கே மாணவர்கள் பெருமளவு பணத்தை செலவிட வேண்டியுள்ளது. வடக்கு, கிழக்கு, ஊவா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு போக்குவரத்து செலவும் சுமையாகும். பொதுப் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டாலும் அதற்கான செலவும் அலரி மாளிகையில் நிகழ்வு நடத்துவதற்கான செலவும் மக்களின் வரிப்பணமே.


மறுபுறம், பல்கலைக்கழகக் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 1,600 மில்லியன் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மாணவர் விடுதிகளை விரிவுபடுத்துவதாக அறிவிக்கப்பட்டபோதும், ரஜரட்ட பல்கலைக்கழகத்துக்காக முன்மொழியப்பட்ட ஏழு விடுதிகளில் ஒன்றுகூட இதுவரை கட்டுமான நிலைக்கு வரவில்லை.

பல்கலைக்கழகக் கட்டமைப்பின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல், மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் பெறும் மாணவர்களை அழைத்து அரசியல் நிகழ்வு நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களின் நிதியை அரசியல் காட்சிப்படுத்தலுக்காக பயன்படுத்துவதையும், மாணவர்களை கட்டாயப்படுத்துவதையும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்மையாக எதிர்க்கிறது. இந்த நடவடிக்கைக்கு எதிராக தலையீடு மேற்கொள்ளப்படும் என மதுஷான் சந்திரஜித் மேலும் தெரிவித்துள்ளார்.