மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில்காட்டுயானை அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த 13 கிராமங்களுக்கு வீதி மின் விளக்குகள்

  







மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் தொடர்ச்சியாக நிலவிவரும் காட்டுயானைகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 13 கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கு வீதி மின் விளக்குகள் வழங்கி வைக்கப்பட்டன.
​இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத் மற்றும் ஞா.சிறிநேசன் ஆகியோரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இம் மின் விளக்குகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
​போரதீவுப்பற்று பிரதேச சபை ஒன்றுகூடல் மண்டபத்தில், பிரதேச சபைத் தவிசாளர் திரு.வி.மதிமேனன் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.
​போரதீவுப்பற்று பிரதேசத்தில் காட்டுயானைகளின் ஊடுருவலால் பல மனித உயிர்கள் பலியாவதுடன், பொதுமக்களின் உடமைகளுக்கும் விவசாயப் பயிர்களுக்கும் தொடர்ச்சியாகப் பாரிய சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையிலேயே, இரவு வேளைகளில் யானைகளின் அச்சுறுத்தலைக் குறைக்கும் பொருட்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
​இதற்கமைய காக்காச்சிவட்டை, பிலாச்சோலை, பிலாலிவேம்பு, விவேகானந்தபுரம், வேற்றுச்சேனை, சின்னவத்தை, ஆணைகட்டியவெளி, காந்திபுரம், மருங்கைநகர், புன்னக்குளம், திக்கோடை, தும்பங்கேணி, 35ஆம் விவசாய அமைப்பு மற்றும் மண்டூர் சங்கபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கு இம் மின் விளக்குகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந் ​நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத், ஞா.சிறிநேசன் ஆகியோர் கலந்துகொண்டு மின் விளக்குகளை கிராம அபிவிருத்திச் சங்கங்களின் நிர்வாகிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.
​மேலும், போரதீவுப்பற்று பிரதேச சபைச் செயலாளர், பிரதேச செயலக மற்றும் பிரதேசசபை உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்களின் நிர்வாகிகள், ஆலய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.