கல்வி, கலை, இலக்கியம் மற்றும் நாடகத்துறையில் பன்முகப் பங்களிப்புகளை ஆற்றிய பேராசிரியர் சி. மௌனகுரு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆறாவது வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நுண்கலைத்துறைத் தலைவரும் ஓய்வுநிலைப் பேராசிரியருமான சி. மௌனகுருவை, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக நியமித்துள்ளார். 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த நியமனம் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவராகப் பேராசிரியர் சி. மௌனகுரு திகழ்கின்றார். குறிப்பாக, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறை ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் அதன் வளர்ச்சிப் பணிகளில் பங்கேற்று, அத்துறையை விரிவுபடுத்துவதில் பங்களித்துள்ளார். பின்னர் நுண்கலைத்துறைத் தலைவராகவும், கலை மற்றும் பண்பாட்டுத்துறை பீடாதிபதியாகவும், பதில் துணைவேந்தராகவும் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
மேலும், சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவனத்தின் இணைப்பாளராகவும், பல்கலைக்கழக நூலகக் குழுத் தலைவராகவும், தமிழ்ச் சங்கத்தின் போஷகராகவும் பணியாற்றியுள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டம் பெற்ற பேராசிரியர் சி. மௌனகுரு, அப்பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
முதுகலைப் பட்டத்தைத் தொடர்ந்து 1967 முதல் 1968 வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பிலுள்ள வின்சென்ட் மகளிர் உயர்தரக் கல்லூரி, மைக்கேல் கல்லூரி மற்றும் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகத் தமிழ் கற்பித்துள்ளார்.
பின்னர் அரச ஆசிரியர் நியமனம் பெற்று, 1968 ஆம் ஆண்டு கல்முனை சாஹிராக் கல்லூரியிலும், 1969 ஆம் ஆண்டு கல்முனை வெஸ்லி கல்லூரியிலும், 1970 ஆம் ஆண்டு வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
1972 முதல் 1976 வரை கல்வி அமைச்சின் பாடவிதான அபிவிருத்தி நிலையத்தில் பாடநூல் எழுத்தாளராகவும் பணியாற்றிய அவர், 1977 ஆம் ஆண்டு யாழ். கல்வி வலயத்தில் ஆசிரிய ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் உஸ்மானியாக் கல்லூரியில் ஆசிரியராகவும், 1981 ஆம் ஆண்டு பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
1984 முதல் 1988 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும், 1989 முதல் 1991 வரை சிரேஷ்ட விரிவுரையாளராகவும் பணியாற்றிய பேராசிரியர் மௌனகுரு, பல்கலைக்கழக மட்டத்திலான தனது நீண்டகால கல்விப் பணியைத் தொடர்ந்து முன்னெடுத்தார்.
கல்வித்துறையில் மட்டுமன்றி, கூத்து, நாடகம், இசை மற்றும் நடனத்துறைகளிலும் பேராசிரியர் சி. மௌனகுருவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
கிழக்கின் பாரம்பரியக் கூத்து மரபுகளையும் நாடகக் கலை வடிவங்களையும் நவீன அரங்குடன் இணைத்து, அவற்றை பல்வேறு தளங்களில் அறிமுகப்படுத்திய கலைஞராகவும் அவர் அறியப்படுகிறார். அவரது நாடக மற்றும் கலைப் படைப்புகள் இலங்கையின் பல பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் அரங்கேற்றப்பட்டுள்ளதாகப் பதிவுகள் குறிப்பிடுகின்றன.
இதனால், கிழக்கின் பாரம்பரியக் கலை மரபுகளை கல்வி மற்றும் அரங்கியல் தளங்களுடன் இணைத்து முன்னெடுத்த கலை ஆளுமையாக பேராசிரியர் சி. மௌனகுருவின் பங்களிப்பு பார்க்கப்படுகிறது.
கல்வியாளர், ஆய்வாளர், நாடகாசிரியர், கூத்துக் கலைஞர் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகி எனப் பல்வேறு தளங்களில் நீண்டகாலப் பணியாற்றிய பேராசிரியர் சி. மௌனகுரு, தற்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆறாவது வேந்தராகப் பொறுப்பேற்கின்றார்.
அவரது நீண்டகால கல்வி மற்றும் கலைப் பயணத்தில் கிழக்குப் பல்கலைக்கழகம் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள நிலையில், அதே பல்கலைக்கழகத்தின் வேந்தராக அவர் நியமிக்கப்பட்டிருப்பது அவரது கல்வி மற்றும் கலைச் சேவையின் மற்றுமொரு முக்கிய அத்தியாயமாக அமைந்துள்ளது.





