இலங்கையில் எதிர்வரும் மாதங்களில் தீவிரமடையக்கூடிய காலநிலை மாற்றம் – எச்சரிக்கும் பேராசிரியர்

 



 


 

இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் காலநிலை மற்றும் மழைப்பொழிவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக முன்னாள் புவியியல் துறை பேராசிரியர் அண்டனி நோர்பர்ட் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் தொடர்ச்சியாக காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் உருவாகக்கூடிய நிலை காணப்படுவதாகவும், அவை வலுப்பெற்று சூறாவளி மற்றும் கனமழை போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகளுக்கு காரணமாக அமையலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நாட்டில் தென்மேற்கு பருவமழைக் காலநிலை நிலவி வருகின்ற போதிலும், அதன் தாக்கத்தினால் வடகிழக்கு மற்றும் தென்பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி பதிவாகி வருவதாகவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

வழமையாக வடகிழக்கு பிரதேசங்களில் வறட்சியான நிலை காணப்படும் காலப்பகுதிகளில், இம்முறை அதற்கு மாறாக அதிக வெப்பநிலை பதிவாகி வருவது கவலையளிக்கும் விடயமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

படிம எரிபொருட்களின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் பசுமைக்குடில் வாயுக்களின் அதிகரித்த வெளியேற்றம் ஆகியவை உலகளாவிய ரீதியில் புவி வெப்பமடைதலை தீவிரப்படுத்தும் முக்கிய காரணிகளாக உள்ளன எனவும் அவர் விளக்கியுள்ளார்.

மேலும், புவி வெப்பமடைதலுடன் எல் நினோ உள்ளிட்ட காலநிலை காரணிகளின் தாக்கமும் அதிகரித்து வருவதால், வழமையாக மிதமான வெப்பநிலை நிலவ வேண்டிய காலப்பகுதிகளில்கூட 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரையான அதிக வெப்பநிலை பதிவாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான அதிக வெப்பநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றுவதுடன், வனவிலங்குகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக பேராசிரியர் அண்டனி நோர்பர்ட் எச்சரித்துள்ளார்.