ஆரையூர் அருளின் “சமுதாயத்தராசு” — மனித மனங்களையும், சமூகத்தின் முகங்களையும் எடைபோடும் ஒரு ஆழமான சிந்தனைப் படைப்பு.





அடர்ந்து வளர்ந்த அந்த மாமரக்கிளையிலிருந்து வசந்தகாலக்குயில்கூவும் குரலுக்கேற்ப அடுத்த வீட்டு ஐந்து வயதுச் சிறுவன் "குக் கூ கூக்" என குரல் கொடுப்பதுவும், குயில் பதில் குரல் கொடுப்பதுமாக இருப்பதை இரசிக்க மனமில்லாதவாறு நாகப்பன் மாமரத்தின் கீழ்இருந்து தனது வலைத் துண்டைப் பொத்திக் கொண்டிருந்தான். உயர்ந்து வளர்ந்த தென்னமரங்களிலிருந்த கீற்றுக்களை, தென்றல் தலை
சீவிவிட, கொண்ட களிப்பினால் குயிலின் பாட்டுக்கேற்ப அபிநயம் பிடித்து அசைந்த கீற்றுக்களினால் ஏற்பட்ட "சில் என்ற காற்று நாகப்பனின் முதுகுப்பக்கமாக மோதியுரச கையிலிருந்த நூலூ சியை வலைக்குள்ளே போட்டு விட்டு, வலக்கையினால் முதுகைவருடி விட்டான். அன்று வைகாசி
பூரண தினமாகையால், அந்தக்கிராமத்தின் மத்தியில் அமைந்திருந்த கண்ணகி அம்பாள் ஆலயதிருக்குளுத்தி அன்றிரவைக்கு நடைபெறவிருந்தது. அந்த அந்தி மாலை நேரத்தில் ஆலயத்தின் ஒலிபெருக்கியில் இருந்து வந்த கண்ணகையம்மாள்மீது பாடப்பட்ட கும்மிப்பாடலும் உடுக்கின் ஒலியும். ஊரையே பத்திப்பரவசத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்தது. ஆனால் நாகப்பன் காதுகளில் அந்தச் சத்தம் கேட்டும். கேட்காதவன் போல மீண்டும் பொத்திய வலையை வளைத்துக் கட்டுவதில் ஈடுபட்டுத் கொண்டிருந்தான்.

நாகப்பன் இதற்கு முந்திய காலமெண்டால் ஆலயக்கதவு திறந்த எட்டு நாளும் மீன் பிடிக்கிற தொழிலுக்கோ,வேறெந்த வேலையில் ஈடுபடுவதற்கோ இடமளிக்க மாட்டான். பொத்தி முடித்த வலைத்துண்டுகளையெல்லாம் சாக்கினுள் ஒழுங்காக எடுத்து வைத்துவிட்டு, தனது நெற்றியில் புரண்டதலைமயிரைக்கையால் கோதிவிட்டு, எழும்புவதற்காக நிலத்தில்கையைகுத்தியவனுக்கு. தெருவினால் அம்பாளுக்கு நேர்த்திக்கடனாக எடுத்துச் செல்லப்பட்ட காவடிக்காக சேவிக் கப்பட்டபறையொலியும். அரோ கராச்சத்தமும் அவனை எழும்பவிடாது ஸ்தம்பிதப்படுத்தியது.

இற்றைக்குப் பன்னிரண்டு வருடங்களுக்குமுந்திய நாகப் பனின் வாழ்க்கைக்கும் இன்றைய வாழ்க்கைக்குமுள்ள வித்தியாசம் அவனது மூளையில் பொறி தட்டியது. மறக்கமுயன்றும் மறக்க முடியாமல் அவனது மனம் இரை மீட்டத் தொடங்கியது. அவனுக்கு அப்ப இருபத்தேழு வயது இந்த மாதிரி வைகாசி குளுத்தி முடிஞ்சி அடுத்தநாள்தான் அவனுக்கு கலியாணம் முடிந்தது. சிறுவயதில் தந்தையை இழந்தவன். வயதான தன் தாயைக்  காப்பாத்த சிறுவயதிலே ஆத்துத்தொழிலைச் செய்து  வந்தான் செய்யும் தொழிலே தெய்வம் என நினைச்சி, அந்தத் தொழிலைப் புனிதமாகப் போற்றி வந்தான். படிப்பு வாசனையற்றவன் தான். ஆனால் அவன் பிறந்த கிராமத்துப் பண்பாடு பாரம்பரியம். கலை கலாச்சாரங்களைக் கட்டிக் காப்பதில்  ஊரவரோடு ஒத்து இளமையிலிருந்தே இனிமையாகபாடக் கூடிய இனிய குரலைப் பெற்றிருந்தான். அந்த கிராமத்துக்கே சொந்தமான வசந்தன், நாட்டுக்கூத்து, கவிபாடுதல் என்ப வற்றில் அவனும் ஒரு பங்காளனாகவே இடம் பிடித்திருந் தான். ஏன் அவன் கலியாணம் முடித்தும் அவன் கடைசியாக ஆடிய "வாளவீமன்" கூத்தில் வாளவீமனாக ஆடி அந்தக் கிராம மக்களின் இதயத்தில் இடம்பிடித்து "வாளவீமன் நாகப்பன்' என்று செல்லமாக ஆழைக்கப்பட்டவன் தான். அவனது திறமையைக் கண்டு அவனுக்குப் பெண் கொடுக்க அந்தக் கிராமத்திலே உள்ள எத்தனையோ பேர் முண்டியடித்துக் கொண்டு நிண்டாங்க, இத்தனைக்கும் அவன் கைப்பிடிச்ச பொன்னம்மா எந்த விதத்திலும்  வசதிப்படைத்தவளில்லை. குச்சிக் குடிலில் தன்ரதாயோடேயும் ஏழு வயதுத்தம்பியோடேயும் தாய் அவலிடிச்சி அன்றாடம் சீவியம் கழிக்கின்ற குடும்பத்தைச் சேர்ந்த வள்தான். அவன் நினைச்சிருந்தால் அந்தக் கிராமத்திலேயும் வசதி படைத்த குடும்பத்தில் பெண் எடுத்திருக்கலாம். ஆனால் தன்னப் போல ஒரு ஏழையாக இருந்த அந்த குடும்பத்தைக்கையேத்து தன்னால் காப்பாத்த முடியுமென்ற பண்பாடு மாறாத அவன்ட உயர்ந்த பண்புதான், வயதானதாயைத்தூதனுப்பி வலியச்சென்று பொன்னம்மாவ அந்தக் கிராமத்து
முறைப்படி தான் கைப்பிடிச்சவன். முறைப்படி பெண்ணுக்கு வேண்டிய கூறை, தாலி எல்லாம் வேண்டி சம்புராதயப்படி மாப்பிளகூட்டிப் போகக்குள, மரபு
முறைப்படி கோயிலுக்குப்போய்தேங்காயுடைத்து, ஆலயத்துக்குள் சென்று வழிபட போகும் போதே ஆலயப் பூசகர் "மாப்பிளை அங்கவஸ்திரத்த கழட்டிட்டு,வாப்பா" என்று சொன்னதும்

அணிஞ்சிருந்த மாப்பிளைவாலா மணிச்சட்டையை கழட்டி தனது மச்சினனிடம் கொடுத்துவிட்டு,சால்வையை உடம்பில் போர்த்துக்கொண்டு தரிசனம் முடிச்சி அதே
கோலத் தோட சென்று திருமணம் முடிச்சவன் தான் அன்றிலிருந்து அவன் சேட்டே அணியிறதேயில்ல,
வேறு கலியாண வீட்டுக்கோ, நல்லகாரியங்களுக்கோ செல்லும் போதெல்லாம் சால்வையைப்போட்டுத்தான் உடம்பை முடிக்கொள்வான். கலியாணம் முடிச்சபிறகுதான் கிராமத்து கலை கலாசார நிகழ்வுகளையும் நடத்துவதில் பூரண ஒத்துழைப்பை வழங்கி அக்கலைகளின் வளர்ச்சிக்கு ஒரு முன்னோடியாகவே இருந்து வந்தான். சித்திரை வருடம் பிறந்து விட்டால், அந்தக்கிராமத்துக்கே சொந்தமான "மகுடி "கோடு கச்சேரி" என்ற நிகழ்வுகளை முன்னின்று ஏற்பாடு செய்வதும், நாட்டுக்கூத்துப் பழக்குவதற்கு அண்ணாவியாரை வரவழைத்து, முகாமையாளராக இருந்து கிராமத்துக்கலைஞர்களை இனங்கண்டு வீடு வீடாகச் சென்றழைத்து அரங்கேற்றங்களையும் செய்து வந்ததினாலும் ஆலயத் திருவிழாவோ,சடங்கோ ஊரிலுள்ள நல்ல காரியங்களோ வாழ்வோ, சாவோ எதுக்கும் முன்னின்று எல்லா வேலைகளையும்செய்து, செய்வித்து வந்ததால் ஊரிலுள்ள அந்தச்சமுதாயமே அவனில் மிக்க மரியாதையான அன்பு வைத்து எந்தக் காரியத்துக்கும் 'நாகப்பன் வரட்டும்? 'நாகப்பன் . சொல்லுறபடிதான் செய்ய வேணும்' என்னுமளவுக்கு சமுதாய நன்மதிப்பைப் பெற்று வந்தவன் தான்

அவன் கலியாணம் முடிச்ச காலத்தில் இருந்து மச்சினன் கணபதியைப் படிக்க வைக்க எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தான். ஆனால் கணபதிக்கு படிப்பு சுத்த சூனியமாகவே இருந்தது. பதினைந்து வயதான பிறகு அவன் படிக்காவிட்டாலும் ஒரு தொழிலைப் பழக்க வேண்டு மென்று தன்னோடே தொழிலுக்கு அழைச்சிச் சென்றான். நாகப்பனுக்கும் ஒரு பெண் பிள்ளையும். இரண்டாவது ஓர் ஆண் பிள்ளையுமாகப் போச்சி, தான் தனியே உழைக்கிற காலத்திலே வீடு கட்டி, வசதியான வாழ்வு வாழ் வதற்கு வழிவகுத்துக் கொண்டான். ஊர்காரியங்களையும் ஒழுங்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் கவனிச்சு வந்தான். மச்சினன் கணபதியைக் கூட்டிக் கொண்டு தொழிலுக்குப் போகத் தொடங்கியதில் இருந்து கிடைக்கும் உழைப்பை மூன்றாகப் பிரித்து ஒரு பங்கை கணபதியின் பேரில்
வங்கியில் கணக்குவைப்பான். ஒரு பங்கை மனைவி பொன்னம்மா விடம் கொடுத்து விடுவான். மூன்றாவது பங்கில் ஒரு பங்கை தொழில் செய்வதற்காகவும், ஊர்ப்பொது விடயங்களுக்காகவும் தேவையறிந்து செலவு செய்வான். கணபதி அவனை மச்சானாக நினைப்பதில்லை தனக்குத் தகப்பன் இல்லாத குறையைத் தீர்க்க வந்ததகப்பன் என்றுதான் நாகப்பனின் செயற்பாடுகளிலிருந்து, சந்தர்ப்பம் கிடைக்குமிடமெல்லாம் நாகப்பனைப் பற்றி ஊரில் சொல்லுவான்.  பிள்ளைகள் படிக்கத் தொடங்கியதும் நாகப்பனின் பரந்த மனதிற்குள் நன்றாக  படித்து  ஆனால் மக்கள் படிப்பு உயர்ந்ததற்கேற்ப, பொன்னம்மாவின் நடத்தைக் கோலம் இறங்கி வந்தது. கலியாணம் முடிச்ச காலத்திலே பொன்னம்மா. நாகப்பன் எதைச் சொன்னாலும், செய்தாலும் சரியென்றே இருந்து விடுவாள். ஆனால், மூத்தபிள்ளை சகுந்தலா படிச்சி சித்தியடைந்து, இலிகிதரானதும், மகன் சரவணன் படிச்சி சட்டத்தரணியானதும் நாகப்பன் செய்கிற எந்த வேலையும் அவளுக்கு பிடிக்கிறதில்ல.

அன்று நடந்த சம்பலம் நாகப்பனின் அடி மனதில் ஆழப் பதிந்து இன்றும் வேலாகக் குத்திக் கொண்டே இருக்கிறது. ஆம். அன்றுதான் பொன்னம்மா சொல்லத்தகாத வார்த்தைகள் கூறி பொல்லாதி பிரிவுத் துயருக்குச் செல்ல வழிவகுத்த புண்ணான நாள், மக்களுடன் உடன் கற்றவர்கள் வரும்பொழுது நாகப்பன் கோமணத்தோடிருந்து வலை பொத்தியதும், வலைப்பண் வீட்டு முத்தத்தில் தாறுமாறாகக் கிடந்ததும், மக்களின் கற்ற நண்பர்களுக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாம். அவர்கள் சென்றதும் வலைப்பண்கள் மீது தீயிட்டுக் கொழுத்தி இங்கிதம் தெரியாத. நாகப்பன் இந்த வீட்டில் இருப்ப தென்றால், இந்த இழிதொழிலை விட்டு விட்டு ஒழுங்காக இருக்க வேண்டுமாம்; இல்லையென்றால் எங்காவது போகவேண்டுமாம்: அதற்கு ஊது குழலாக மக்களும் சேர்ந்து பாடியது அவனது இதயத்தைச் சுத்தியலால் அடித்து சுக்கு நூறாக்கி விட்டது. நாகப்பனும் ஆத்திரத்துடன் "மீன் வித்தகாசி இவளவு நாளாக நாறல்ல.
ஏன் நீங்க பெற்ற படிப்பு, பட்டம் இவைகளுக்கு உதவின போது உங்க பட்டம், படிப்பு நாறல்ல இப்ப எல்லாம் முடிஞ்சி போச்சி நாகப்பன் என்ற மரியாதை தேஞ்சி,

வந்த பாதையையும் திரும்பிப் பாக்க அருவருக்கின்ற உங்களோ ஒரு நிமிடம் கூட இருந்தால் கொடிய பாவம் வந்து என்னைச் சேரும் "பட்ட பாட மறந்தால், பரமசிவனும் படியளக்கமாட்டான்" என்று கூறி, வீட்ட விட்டு வந்தவன் தான் இப்ப பதினாறுவருடமாச்சி. ஊரிலுள்ளவர் நாகப்பனுக்கு இப்படியான ஓர் அனாதை வாழ்வு கிடைத்து விட்ட தென்று சமரசம் பேசப்போய் பொன்னம்மா பிள்ளைகளிடம் மூக்குடைபட்டு, "பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒட்டாது. நாகப்பா இப்படிப்பட்ட பொண்டாட்டி பிள்ளைகளோட உனக்கென்ன குறை நீ விரும்பினால்  வேறு ஒரு நல்ல  பெண்ணைக் கலியாணம் முடி கடைசி காலத்தில உனக்கு கஞ்சி ஊத்தவாவது உதவியா இருக்கும் என்று கூறியும். இந்த கிராமத்துப் பண்பாடு ஒருவனுக்கு ஒருத்தி என்பது. இந்த பிறவில நான் வேறு ஒரு கல்யாணம் செய்ய மாட்டேன் என கூறி தனது மச்சினனின் சீதன வழவிள் ஒரு குடில் கட்டி இன்றைக்கும் தானே சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறன். 


என்ன நாகப்பா கப்பல் கவுண்டாலும் கலங்காத நீ இண்டைக்கு யோசிக்கிறதப் பார்த்தா எனக்கு ஒரு மாதிரியாக் கிடக்கு என்று தன்னோடு இப்போ தொழிலுக்குப் போற பொன்னனின் குரல் கேட்டு எழும்பின நாகப்பன் தண்ணீரில் மீன் அமுதா கண்ணீரைக் கண்டதில்லை என்னுள்ளே நானழுவதை எவருக்கும் சொன்னதில்லை என மனதுக்குள் நினைத்தவாறு ஒரு பெருமூச்சை விட்டபடி ஒன்றுமில்லை பொன்னண் சும்மா வலையை வளர்ச்சிக் கட்டிப் போட்டுக் குந்தியிருந்த நான் என்று மழுப்பினான் என்னதான் இருந்தாலும் நாகப்பா இப்படியான கல்நெஞ்சுக்கார பொண்டாட்டி புள்ளைகளை நான் காணல்ல என்று பொன்ணன் கூற   "வீட்டுக்கு வீடு வாசற்படிதான் பொன்னண்ண" ஒரு சிலருடைய தலைவிதி வெளியில் தெரியுது" என்று அமைதியாகப் பதில் கூறிய நாகப்பன்.

போய் ஆயித்தப்பட்டுத் துவ,  ஆறு மணியாகப் போகுது இண்டைக்கு நேரம் போயித்து மறுகா. அமைதிப்படையால் ஆத்தில் போக தடையாயிருக்கும். ஆத்தங்கரையில் காவலுக்கு வந்து கிடப்பானுகள்" என்றான். என்ன நாகப்பா,இரவைக்குக் குழுத்தி, அதுவுமல்லாம இரவைக்கு இரண்டு மணிக்கு உன்ர மகளுக்கு கலியாணம் என்னதானிருந்தாலும், பெற்ற பிள்ளைகள் அறிவு கெட்டதுகள் தான் தகப்பனைத் தகப்பனென்டுசொல்ல வெக்கப்பட்டா, உனக்கு உரிமை யிருக்கு  இவ்வளவு நாளும் நான் சொல்லக் கூடா என்றுதான். ஊராக்களோட ஒத்து உனக்கிட்ட ஒண்டும் சொல்லல்ல வா இப்ப போய் இரண்டில் ஒண்டு பாக்க வேணும் இந்தக்கிராமத்துச் சம்பிரதாயங்கள் கட்டிக்காத்த உனக்கே. உண்ட வீட்டில் இந்தப் பொல்லாத அநியாயம் நடக்குது என்ற மனம் கேட்கல்ல தொழிலுக்கு போறல்ல” என்று பொன்னன் கூற, பொன்னண்ண் இவ்வளவு நாளா கட்டிக்காத்த என்ற கௌரவத்த இண்டைக்கு இழக்க நான் விரும்பல்ல. 

நீங்க போய் குழுத்தி பாருங்க நான் தனிய தொழிலுக்குப் போறன். இவ்வளவு காலமா இந்த ஊர் மக்கள் என்னில் வைச்சிருக்கிற மரியாதையைக் காப்பாத்த வேணு மெண்டா. இண்டைக்கு நான் என்ற இந்த ஆத்துத் தொழிலச் செய்துதான் தீர வேண்டும். அதுதான் இந்த ஊருக்கும் என்ற தொழிலுக்கும் கொடுக்கிற மரியாதை” என்று கூறிய நாகப்பன் சவளையும், வலைச்சாக்கையும் தூக்கிக்கிட்டு ஆத்தங்கரையை நோக்கி நடக்க, அவனது உறுதியையும், மன வைராக்கியத்தையும் நினைத்து, வாய் வார்த்தைகளைத் தேட பொன்னன் விறைத்துப்போய் நிண்டான்.

அடுத்த நாள் விடியச்சாமம் ஆற்றங்கரை அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது அந்தக் அந்த கிராமமே கூடி ஒரு பக்கம் நாகப்பனின் நல்ல பண்புகளை கூறி கண்ணீர் சிந்திக் கொண்டிருக்க மற்றும் சிலர் அவனுக்கு கிடைத்த குடும்பத்தார் அதுவும் மகளின் கல்யாணமும்  அவனுக்கு காலனாகப்போச்சி என்று கரிச்சிக் கொட்டிட்ட கண்ணீரும் ஆத்து உப்பு நீரோட சேர்ந்து உப்பின் செறிவை கூட்டிக் கொண்டிருந்தது. "எப்படியப்பா உனக்கு இந்தக்கதி ஏற்பட்ட தென்றுஊரே அங்கலாய்த்தது. நாகப்பன் ஆத்தில வலையைப் போட்டுத்து, விடிவெள்ளியைக் கண்டு வலையை வளைத்து அடித்து சாக்கில கட்டி, அணியத்துப் பலகையில் வலைச்சாக்கை வைத்து புறகத்திலயிருந்து. தொடுத்துக் கரையை நோக்கிவர "அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாய மெல்லாம் பேய்" என்பது போல. ஆற்றங்கரை மரத்தில் இருந்த அமைதிப்படையெமனுக்கு வேற மாதிரிக் தோன்ற, வெச்சி விட்டான் வெடிபட்டுவிட்டதோ பண்பாளன் நாகப்பன் உயிர்" என்று ஆரோ கூறிக்கொண்டது. உண்மையென்பதை தமிழனைக்காக்க வந்த' அமைதிப்படைத் தலைவன் ஊர் ஜிதம் செய்தான்,நாகப்பன் பற்றிய சரிதம் அமைதிப்படைத் தலைவனுக்கு ஊர்மக்களால் கூறப்பட்டு, அடக்கம் செய்யும் அனுமதியைஅனைத்து ஊர்மக்களும் பெற்றுக்கொண்டனர். சட்டம் படித்த மகன் சரவணன், சடலம் அடக்கம் செய்வதற்கும் தனது சட்டத்தைப் பயன்படுத்தி வாதிட வர, ஊர்மக்களின் ஏகோபித்த குரல்கள் நீசட்டம் படித்திருக்கலாம் தம்பி இந்த கிராமத்து சமுதாய சட்டம், ஒரு வீட்டிலே சாவிழுந்தால், வீட்டிலிருக்கும் வரை அந்தச் சடலம் வீட்டாருக்குச் சொந்தம் வீட்ட விட்டு வெளியே வந்தால் ஊராருக்குத்தான் சொந்தம். நாகப்பனுக்கு ஊர்தான் வீடு, அவன்ட உடல் ஊரிலதான் கிடக்கு அதனால எங்களுக்குத்தான் சொந்தம். அவனை அனாதையாக எண்டைக்கு வீட்ட விட்டுத் தூரத்தினீங்களோ அன்டையிலிருந்து அவனை அப்பனென்டுசொல்ல அருகதையற்ற மெத்தப்படிச்ச உன்ன இந்த காலத்திரயும் விட்டு வைக்கிறமெண்டால் இந்த நாகப்பன்ட நல்ல பண்பாட்ட காப்பாத்துவதற்கு தான் இல்லாட்டா இங்க முதலில் உங்க குடும்பத்தைதான். இந்த உத்தமண்ட உடல விட முதலில் அடக்கம் செய்திருப்போம் என்று கர்ச்சித்தனர்.

இன்றைய சமுதாயத்தில் எத்தனை நாகப்பன்கள் தங்களையாளாக்கிய மக்களாலே அனாதைகளாக்கப்பட்டு தள்ளா வயதில் தெருக்களிலும் அனாதை  மடங்களிலும்  அடைக்கலம் புகுந்துள்ளனர் வித்தகன் விபுலன் மீனின் இசைகேட்டு  யாழ்  நூலமைத்தான் மீன்கள் பாட மகளின்மடியிலே கலவரத்தால் உயிரிழந்த எத்தனையோ தமிழர்களின் மணைமுறுல்கள் அடங்கி ஒடுங்கி விட்டன. மீனினம் பாட மறுதலித்ததனால் அங்கு மௌனம் தான் குடிகொண்டதோ என நினைக்கும் வகையில் நிசப்பதம் நிலவுகின்றது.


அவன் கிடக்கிறான் குடும்பத்தையழிக்க வந்த கோடரிக் காம்பு, இவனாலதானே இந்த அமரனின் வாழ்வு குட்டிச்சுவராய்ச்சிது எண்டு திட்டித் தீர்த்த" நாகப்பனின் நன்றிக்கடனுக்காக  இளைய தலை முறையினர் அடக்கத்துக்குரிய அனைத்துக் காரியங்களையும் செய்து முடித்தனர்.

மானிடராய்ப் பிறந்து விட்டால் வாழ்வு இரண்டு முறை நாகப்பனின் மணக்கோலத்திற்கு ஊர் கூடவில்லை. அவன் பிணக்கோலத்திற்கோ ஊர் கூடியது. மீன் பிடிச்சங்கம், ஊரிலுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட நாகப்பனால் சமுதாய உணர்வூட்டப்பட்ட சமூக சேவை நிறுவனங்கள் பாரம் பரியப்படி ஒரு கிராமத்துத் தலைவனுக்குரிய முறைப்படி, நலபா வாடைவிரித்து. தெருவெங்கும் வாழை மரங்கள் நாட்டி. தென்னோலைத் தோரணங்கள் கட்டி, பதாதைகள் தொங்கவிட்டு எண்ணற்ற மலர் வளைங்கள் தாங்கி. நாகப்பனின் பொன்னுடலைத் தாங்க போட்டி போட்டு மாறி மாறி நாலுப்பேர் சுமந்து செல்ல  அவன் புகழுடலை மனங்களில் சுமந்தவாறு மெளனமாக ஊரே சேமக்காலையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.