புதர்களுக்குப் பின்னால் ஒளிந்திருந்து தவறுகளைப் பிடிக்க வேண்டாம் பொலிஸ் அதிகாரிகளுக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

 

 


போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை நிறுத்த வேண்டிய ஏற்படும் போது, புதர்களுக்குப் பின்னாலோ அல்லது தனிமையான இடங்களிலோ ஒளிந்திருக்கக் கூடாது என போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். வாகனங்களை நிறுத்த வேண்டிய தேவை ஏற்படும் போது, அது ஏனைய வீதிப் பயனாளர்களுக்கும் தெளிவாகத் தெரியும் வகையில் திறந்தவெளிப் பகுதிகளிலேயே செய்யப்பட வேண்டும் என்றும், வீதியோரக் கடமைகளின் போது பொலிஸ் திணைக்களத்தின் சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை அதிகாரிகள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் நினைவூட்டியுள்ளார். அத்துடன், சாரதிகள் பொலிஸ் அதிகாரிகளுக்கு நேரடியாகப் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்றும், தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் போது தபால் நிலையங்கள் போன்ற சட்டபூர்வமான வழிகள் மூலமாகவே அபராதத்தைச் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளுக்குப் புறம்பாக வீதியோரத்தில் பொலிஸாருக்கு அளிக்கப்படும் பணம் லஞ்சமாகக் கருதப்பட்டு, அதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என எச்சரித்துள்ள அவர், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சாரதிகளிடம் லஞ்சம் கோரவோ அல்லது பெறவோ பொலிஸ் அதிகாரிகளுக்கு உரிமை இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.