சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, "நீதிக்கான நீள் பயணம்"

 


சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, "நீதிக்கான நீள் பயணம்" எனும் தொனிப்பொருளில் மாபெரும் சர்வதேச மாநாடும் கவனயீர்ப்பு பேரணியும் 30.08.2026 இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
இம் மாநாட்டில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் அவர்கள், கலந்து கொண்டு தனது ஆதரவை வழங்கியிருந்தார்.
​வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வுகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டன.
​மாநாட்டிற்கு முன்னதாக இன்று காலை, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிரிழந்தவர்களின் நினைவாக அமையப்பெற்ற நினைவுத் தூபியில் பொதுச் சுடரேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
​தொடர்ந்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பங்கேற்புடன் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிரிழந்தவர்களின் நினைவுத் தூபியிலிருந்து தந்தை செல்வா கலையரங்கு வரை மாபெரும் கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.
​பேரணியைத் தொடர்ந்து, தந்தை செல்வா கலையரங்கத்தில் "நீதிக்கான நீள் பயணம்" சர்வதேச மாநாடு உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.
நீதிக்கான நீள் பயணத்தில் உயிரிழந்தோரின் நினைவாக சுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டதை அடுத்து நினைவுரைகளும் இடம்பெற்றன.
​இம் மாநாட்டில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், ஞா.சிறிநேசன், து.ரவிகரன், ஐ.நா பணிக் குழு உறுப்பினர், சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர், சர்வதேச ராஜதந்திரிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வேலன் சுவாமிகள், மன்னார் மறை மாவட்ட ஆயர், மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கப் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,பொது அமைப்புகள் பிரதிநிதிகள், தமிழ்த் தேசியப் பற்றாளர்கள், தமிழ் உணர்வாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு தமது ஆதரவை வழங்கினர்.