மட்டக்களப்பு மண்டூர் முருகனின் தீர்த்தோற்சவம்-2026

 


மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்கே ஏறத்தாழ 30 மைல் தொலைவில், இயற்கை வளம் கொஞ்சும் மண்டூர் கிராமத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு முருகன் திருக்கோவில். சூரசம்ஹாரத்திற்குப் பின் பெருமானின் வேலிலிருந்து கிளம்பிய தெய்வீக ஒளிப் பிளம்புகளில் ஒன்று உகந்தையிலும், மற்றொன்று திருக்கோவிலிலும், மூன்றாவது மண்டூரின் தில்லை மரங்கள் நிறைந்த வனப்பகுதியிலும் வேல்களாக உருப்பெற்றன என்பது இத்தலத்தின் வரலாற்றுச் சிறப்பு.

இவ்வாண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க மகோற்சவம் கடந்த 08.08.2026 அன்று கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது. தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த திருவிழாவின் சிகர நிகழ்வான தீர்த்தோற்சவம் 28.08.2026 (வெள்ளிக்கிழமை) காலை விசேஷ பூஜைகளுடன் இனிதே நடைபெற்றது.

பூக்களாலும் தோரணங்களாலும் கண்கவர் விதத்தில் அலங்கரிக்கப்பட்ட வீதிகளின் வழியே புஷ்பக வாகனத்தில் எழுந்தருளிய பெருமானுக்குப் பக்தர்கள் மலர்மாரி பொழிந்து வழிபாடுகளைச் செய்ததைத் தொடர்ந்து, சபாமண்டபத்தில் மஞ்சள் பிரசாதம் வழங்கப்பட்டு, மாணிக்க கங்கையின் கிளையாறு மட்டக்களப்பு வாவியில் சங்கமிக்கும் புண்ணிய தீர்த்தத்தில் சுவாமியுடன் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் நீராடிப் பரவசமடைந்தனர்; பின்னர் தீர்த்தம் முடிந்து திரும்பும் வழியில் பெருமான் தனது இருப்பிடத்திற்குச் செல்லாமல் தேவயானை அம்மன் ஆலயத்தைக் கடந்து வள்ளி பிராட்டியின் சந்நிதிக்கு எழுந்தருளும் அபூர்வ வள்ள திருமணப் படலம் மற்றும் தேவயானை ஊடல் நிகழ்வும் கோலாகலமாக நடைபெற்றது.

தன்னைப் புறக்கணித்துச் செல்லும் பெருமானின் செயல் கண்டு கோபமுறும் தேவயானை அம்மனின் சீற்றத்தை வெளிப்படுத்தும் விதமாக, ஆலாத்தி எடுத்த சிறுமிகளும் வில்-அம்பு ஏந்திய சிறுவனும் மயக்கமடையும் காட்சி தத்ரூபமாகப் சித்தரிக்கப்பட்டது. பின்னர் வள்ளி கோவிலின் வம்மி மர நிழலில் அவர்களுக்குத் திருநீறும் தீர்த்தமும் தெளிக்கப்பட்டு மயக்கம் தெளிவிக்கப்படும் சடங்கு, அங்கு திரண்டிருந்த பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

மாலை வேளையில் சுவாமி மீண்டும் மூலஸ்தானம் திரும்பியதை அடுத்து, இந்த ஆண்டின் திருவிழா நிறைவுற்றது.