அரச மற்றும் மாகாண அரச சேவைகளில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு இணங்க, மட்டக்களப்பிலும் இன்று (31) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெருமளவான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களுக்கு முன்பாகவும் இப்போராட்டம் மதியம் 12:00 மணி முதல் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, தங்களது நீண்டகால கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தியோகத்தர்கள் கோஷங்களை எழுப்பியதுடன், தங்களது உரிமைகளுக்கு உரிய தீர்வை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
- அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சம்பள முரண்பாடுகளை உடனடியாகத் தீர்ப்பதுடன், அவர்களது தகைமைகளுக்கு பொருத்தமான முறையான சேவைப்பிரமாணத்தை (Service Minute) நடைமுறைப்படுத்தி, தேங்கியுள்ள பதவி உயர்வு வாய்ப்புகளையும் எவ்வித தாமதமுமின்றி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதேவேளை, மட்டக்களப்பில் மாத்திரமன்றி, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் திணைக்களங்களுக்கு முன்பாகவும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
தங்களது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய முறையில் தீர்வை வழங்கத் தவறும் பட்சத்தில், நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க நேரிடும் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்























