மட்டக்களப்பு மற்றும் தாய்வான் YMCA இளைஞர்களின் கூட்டுப்பங்களிப்பில் முன்னெடுக்கப்படும் சமூக நல வார வேலைத்திட்டம்



























































SIVAKUMAR . M


மட்டக்களப்பு YMCA கழகத்தின் 55-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மட்டக்களப்பு மற்றும் தாய்வான் நாட்டு YMCA இளைஞர்கள் ஒன்றிணைந்து நடத்தும் ஒரு வார கால சமூக நல வேலைத்திட்டம் பிராந்தியத்தில் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.

இவ்வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக, சௌக்கடி பாடசாலை மாணவர்களின் நலன் கருதி பல்வேறு புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, மாணவர்கள் பயன்படுத்தும் மேசைகள், கதிரைகள்  மற்றும் விளையாடும் பூங்கா ஆகியன வர்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டன. அத்துடன், மாணவர்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் பாடசாலை சமையலறை வர்ணம் பூசி சுத்திகரிக்கப்பட்டதுடன், தூய குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்காகப் புதிய நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது. இப்பணிகளைத் தொடர்ந்து, YMCA இளைஞர்கள் அங்கிருந்த சிறுவர்களுடன் இணைந்து விளையாடி, அவர்களது பொழுதைக் கழித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, மட்டக்களப்பு மாநகர சபையுடன் இணைந்து நகரப் பகுதியில் அமைந்துள்ள லகுன் பார்க் (Lagoon Park) பகுதியினைச் தூய்மைப்படுத்தும் சிரமதானப் பணி நேற்று (18-07-2026) வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் மத்தியில் சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதற்கான மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் விளக்கும் துண்டுப்பிரசுரங்கள் இளைஞர்களால் விநியோகிக்கப்பட்டன.

இவ்வேலைத்திட்டத்தின் அடுத்த கட்டமாக, நாளை கொத்தியாவலையில் அமைந்துள்ள தாதியர்களுக்கான ஃபீனிக்ஸ் மையம் (Phoenix Center) சுத்திகரிக்கப்பட்டு, வர்ணப்பூச்சு பூசப்படவுள்ளதுடன், அங்குள்ளவர்களுக்கான நீர் வழங்கல் வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.

தாய்வான் மற்றும் மட்டக்களப்பு YMCA இளைஞர்களின் இத்தகைய கூட்டுச் சமூகப் பணிகள், அவர்கள் கொண்டுள்ள சமூகப் பற்றையும் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.