கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையில் நடைபெற்ற 'மஞ்சளழகி' வடமோடிக் கூத்திற்கான சட்டங்கொடுத்தல் நிகழ்ச்சி

 














இலங்கைக் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையின் கலைத்திட்டத்திற்குள் உள்ளடங்கும் வடமோடிக் கூத்துக் கற்கைக்கான செயற்பாடாக 'மஞ்சளழகி' என்னும் வடமோடிக் கூத்திற்கான சட்டங் கொடுத்தல் நிகழ்ச்சி இன்று (03.07.2026) வெள்ளிக்கிழமை முற்பகல் வந்தாறுமூலையிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் மிகச்சிறப்பாக நடந்தேறியது.
நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளரான கலாநிதி சு.சந்திரகுமார் அவர்களின் பொறுப்பில் நடைபெறவுள்ள இக்கூத்தின் உருவாக்கத்திற்கான அண்ணாவியாராக மட்டக்களப்பு தன்னாமுனையைச் சேர்ந்த திரு சீனித்தம்பி அலக்ஸ்சாண்டர் அவர்கள் பணியாற்றுவதுடன் அவருக்கு உதவியாகவும் ஏடு பார்ப்பவராகவும் மூத்த கூத்துக் கலைஞர் திரு முத்துலிங்கம் அவர்கள் இயங்கவுள்ளார்.
நுண்கலைத்துறைத் தலைவி திருமதி துஸ்யந்தி சத்தியஜித் அவர்களின் தலைமையில் நடைபெற்ற சட்டங்கொடுத்தல் நிகழ்ச்சியில் பிரதம அதிதியாகக் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கணேஸ் சுரேஸ் அவர்கள் வருகைதந்து சிறப்பித்திருந்ததுடன், வருகைதரு மரபுக் கலைஞர்களான கூத்தின் அண்ணாவியாரையும், ஏடு பார்ப்பவரையும் வேட்டி அணிவித்து மாண்பு செய்தார்.
இந்திகழ்ச்சியில் பேராசிரியர் சி.ஜெயசங்கர் அவர்களால் 'கூத்தும் சமூகமும்' என்ற தலைப்பில் ஓர் உரையும், முதுநிலை விரிவுரையாளர் திரு கு.ரவிச்சந்திரன் அவர்களால் 'கூத்தில் சட்டங் கொடுத்தல்' என்ற தலைப்பிலான ஓர் உரையும் ஆற்றப்பட்டிருந்தது.
நுண்கலைத்துறையில் சிறப்புக் கற்கையில் ஈடுபடும் 17 மாணவர்கள் கூத்தில் ஆடுவதற்கான பாத்திரங்களுக்கான சட்டங்களை வைபவரீதியாகப் பெற்றுக் கொண்டார்கள். சட்டங்கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து கூத்துப் பயிற்சி மரபு முறைப்படி ஆரம்பித்து நடைபெற்றது.
இவ்வைபவத்தில் கலை கலாசார பீடத்தின் முதுநிலை விரிவுரையாளர்களான பேராசிரியர் சி.சந்திரசேகரம், பேராசிரியர் வ.குணபாலசிங்கம், பேராசிரியர் என்.வாமன், கலாநிதி மேகராசா ஆகியோருடன் துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள், மாணவர்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் பங்குபற்றிச் சிறப்பித்திருந்தனர்
 
து.கௌரீஸ்வரன்,
03.07.2026