கனடாவில் எண்ணூறு பேருடன் களைகட்டிய கல்முனை பிராந்திய இணையத்தின் மாபெரும் ஒன்றுகூடல் விழா











 


( வி.ரி.சகாதேவராஜா)

 கனடா மெலிகன் (Milliken) பூங்காவில் நேற்று(14) நடைபெற்ற கல்முனைப் பிராந்திய இணையத்தின் மாபெரும் ஒன்றுகூடல் விழா, சமூக உறவுகளை வலுப்படுத்தும் நிகழ்வாக இடம்பெற்றது.

இந்நிகழ்வு, தலைவர்  விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை ( விசு) தலைமையிலும், தலைமை ஒருங்கிணைப்பாளர் நோ. விஜயரட்ணம்  ஒருங்கிணைப்பிலும் நடைபெற்றது.

 நிகழ்வை சிறப்பாக நடத்துவதற்காக இணையத்தின் உறுப்பினர்கள் பலரும் இணைந்து பணியாற்றினர்.

எண்ணூற்றுக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட இவ்விழாவில், கல்முனை பிராந்திய மக்களுடன் இணைந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தமிழ் உறவுகளும் பங்கேற்றனர். சமூக ஒற்றுமை மற்றும் உறவுப் பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்வு அமைந்திருந்தது.

காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ் கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு அம்சங்கள், காலை மற்றும் மதிய உணவு உள்ளிட்ட விருந்தோம்பல் ஏற்பாடுகள் இடம்பெற்றன.

 சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இதில் பங்கேற்றனர்.இந்நிகழ்வின் மற்றுமொரு சிறப்பம்சமாக, பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் உற்சாகமான சூழலில் நடைபெற்றதுடன், வெற்றியாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. நிகழ்வின் தொடக்கத்தில் கனேடிய தேசிய கீதம் இசைக்கப்பட்டு, மரியாதையுடன் அனைவரும் ஒன்றிணைந்து பாடினர். அதனைத் தொடர்ந்து, கனடா நாட்டின் தேசியக் கொடியை  வல்லிபுரம் பரமானந்தராஜா ஏற்றிவைத்தார். கல்முனை பிராந்திய இணையத்தின் கொடியை  வைரமுத்து அனந்தலிங்கம்  ஏற்றிவைத்தார். இந்நிகழ்வில்  நந்தகுமார்  எமது இயக்குநர் சபை உறுப்பினர்களில் ஒருவரான  ஸ்ரீ, மன்றத்தின் செயலாளர்  பத்மநாதன்,  கோபி, கிஷாந்த் மற்றும் பலர் எமது மன்ற உறுப்பினர்கள்   இணைந்து கலந்து கொண்டு, கொடியேற்ற நிகழ்வை சிறப்பித்தனர். 

இந்த கண்ணியமான நிகழ்வு விழாவிற்கு மேலும் சிறப்பையும் தேசிய உணர்வையும் சமூக ஒற்றுமையையும் சேர்த்தது.

இந்நிகழ்வின் போது, எதிர்காலத்தில் தமிழ் சமூக கலாச்சார மண்டபம் அமைக்கும் நோக்கத்திற்காக $10,000 நிதியுதவியை தலைவர் திரு. விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்கள், பணிப்பாளர் திரு. ரமணன் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். இந்த நிதி சமூக உறுப்பினர்களின் பங்களிப்பால் திரட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு பங்களித்த தலைவர், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், தன்னார்வத் தொண்டர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் இணையத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.