மட்டக்களப்பில் சோகம் , கட்டிடத் தூண் இடிந்து விழுந்து பட்டதாரி இளைஞன் பரிதாப பலி!

 



மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீடு ஒன்றின் கட்டுமானப் பணியின் போது, தூண் இடிந்து விழுந்ததில் கட்டிடத் தொழிலாளியான இளைஞர் ஒருவர் இன்று புதன்கிழமை (29) பிற்பகல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு ஜெயந்திபுரம், யாட் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே இச்சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.

காத்தான்குடி நூரானியா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் அமைக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில், இன்றைய தினம் பிற்பகல் குறித்த இளைஞர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இதன்போது எதிர்பாராதவிதமாக காங்கிரீட் தூண் ஒன்று இடிந்து அவர் மீது விழுந்ததில், கடுமையான காயங்களுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கிழக்குப் பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர், வேலையின்மை காரணமாக பகுதிநேரமாக இக்கூலித் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.