சிவகுமார் .M
மட்டக்களப்பு இந்துக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக குடமுழுக்கு பெருஞ்சாந்தி பெருவிழா, இன்று (02.07.2026) வியாழக்கிழமை பக்திபூர்வமாக நடைபெற்றது. திருவோண நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய முற்பகல் 11.06 மணி முதல் 12.15 மணி வரையான கன்னி லக்கின சுப முகூர்த்த வேளையில் இந்த சிறப்புமிக்க நிகழ்வு இடம்பெற்றது.
இக் கும்பாபிஷேகக் கிரியைகளை சிவாகம கிரியாஜோதி, தேசகீர்த்தி, தேசமண்ய ஈசான சிவாச்சாரியார் நவரெத்தன முரசொலிமாறக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நெறிப்படுத்தி, சுப முகூர்த்த வேளையில் குடமுழுக்கைச் செய்து வைத்தனர்.
முன்னதாக, கடந்த ஜூன் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு கர்மாரம்ப நிகழ்வுகளுடன் கும்பாபிஷேக விழா ஆரம்பமானது. அன்று மாலை விநாயகர் வழிபாடு, பிரதான கும்பம் யாகசாலைப் பிரவேசம், முதற்கால யாகபூஜை, ரத்னநியாசம், ஐந்திரஸ்தாபனம், பிம்பஸ்தாபனம், அஷ்டபந்தனம் மற்றும் விபூதிப் பிரசாதம் வழங்கல் போன்ற கிரியைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, நேற்று ஜூலை 1ஆம் திகதி புதன்கிழமை இரண்டாம், மூன்றாம் கால யாகபூஜைகளுடன் விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், வேத தோத்திர பாராயணம் என்பன நடைபெற்றன. அத்துடன் பக்தர்களுக்கு பால்காப்பு மற்றும் எண்ணெய்க்காப்பு சாற்றும் தைலாப்பியாங்க நிகழ்வும், விசேட திரவிய ஹோமம், சாமான்ய பூர்ணாகுதி, தீபாராதனை என்பனவும் இடம்பெற்றன.
இன்று (02.06.2026) வியாழக்கிழமை காலை 7.00 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் நான்காம் கால யாகபூஜை ஆரம்பமாகி, மஹாபிஷேகம், விசேட பூஜை, ஆசீர்வாதம், குரு ஆசியுரை மற்றும் சிவாச்சார்ய சம்பாவனை என்பன நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, யாகசாலையிலிருந்து புனித குடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, சுப வேளையில் ஆலய கோபுரக் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவில் பாடசாலை அதிபர், உப அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் பெற்றனர். கும்பாபிஷேக நிகழ்வுகளின் நிறைவில், வருகை தந்திருந்த பக்த பெருமக்கள் அனைவருக்கும் இந்துக்கல்லூரி ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய நிர்வாக சபையினரால் அன்னதானம் வழங்கப்பட்டது.












































































