ஏறாவூர் மாரியம்மன் ஆலய அன்னதான நிகழ்வில் வாள்வெட்டு: பெண்கள் உட்பட நால்வர் படுகாயம்!

 



 மட்டக்களப்பு-ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மைலம்பாவெளி, விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற அன்னதான நிகழ்வின் போது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் பெண்கள் இருவர் உட்பட நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று புதன்கிழமை (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் பகல் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதன்போது அன்னதானத்தைப் பெற்றுக்கொண்ட இளைஞரொருவர், உணவின் தரம் குறித்துக் கேள்வி எழுப்பவே, அவருக்கும் அன்னதான விநியோகத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, 7 பேரடங்கிய குழுவினர் வாள்களுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து அன்னதானம் வழங்கியவர்கள் மீது கொடூரமான முறையில் வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் காயமடைந்த நால்வர் உடனடியாக மீட்கப்பட்டு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவரின் நிலைமை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் கூடியிருந்த பொதுமக்கள், தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பியோட முயன்ற வன்முறைக் குழுவினரை மடக்கிப் பிடிக்க முற்பட்டனர். இதன்போது அக்குழுவைச் சேர்ந்த ஒருவர் பொதுமக்களால் பிடிபட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். ஏனைய சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

தப்பியோடிய ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளையும் தேடுதல் நடவடிக்கைகளையும் ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.