ஆயிரக்கணக்கான அடியார்கள் பயணிக்கும் பாணமைச் சந்தியில் உகந்தைக்கான அறிவித்தல் பலகை இல்லை!! வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அசமந்தபோக்கு!

 



( வி.ரி. சகாதேவராஜா) 

கதிர்காமத்திற்கு காட்டுப்பாதையால் செல்லும் ஆயிரக்கணக்கான அடியார்கள் பயணிக்கும் பாணமைச் சந்தியில் உகந்தைக்கான அறிவித்தல் பலகை இதுவரை நாட்டப்படவில்லை.
இதனால் அடியார்கள் திசை மாறி பாணமைக் கிராமத்துக்குள் செல்ல வேண்டிய அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊடகங்களிலே செய்திகள் வெளி வந்தன. தற்போது பாத யாத்திரை ஆரம்பமாகிய சூழலில் கூட இன்னும் இதனைக் கண்டுகொள்ளாது அறிவித்தல் பலகை நடப்படாதது கண்டு அடியார்கள் பொதுமக்கள் பலத்த விஷனம் தெரிவித்துள்ளனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அசமந்தபோக்குதான் இதற்கு காரணம் என்று அவர்கள் சாடுகிறார்கள்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஒரு தமிழராக இருந்தும், இரண்டு மாதங்களுக்கு முன் சுட்டிக்காட்டியும் இன்னும் அது நடைபெறவில்லை.


அத்தோடு அம்பாறை மாவட்டத்தில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் இந்த விடயத்தை புறக்கணிக்கின்றார்களா ? அல்லது பாரபட்சம் காட்டுகின்றார்களா? என்ற கேள்வியும் எழுகிறது.

மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் இத்தகைய சபைகள் மக்களுக்கான சேவையை செய்ய தயங்குவது ஏன்? முக்கியமான சந்திகளில் பயணிகள் நலன்கருதி திசை காட்டும் அறிவித்தபலகை  இட வேண்டியது அந்த சபையின் கடமை என்பதை மறந்து செயற்படுகின்றார்களா? என்றும் வினவுகின்றனர்.



விபரம்:

அம்பாறை மாவட்டத்தின் பாணமை சந்தியில் இருந்து , காட்டிற்குள் இருக்கும் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை முருகன் ஆலயம் நோக்கிச் செல்லும் பிரதான வீதிக்கான திசை நிர்ணய வீதி அறிவித்தல் பலகை இதுவரை பாணமைச் சந்தியில் நிறுவப்படவில்லை என பக்தர்களும் பொதுமக்களும் கவலை வெளியிட்டிருந்தனர்.

பாணமை சந்தியிலிருந்து உகந்தமலை ஆலயத்திற்குச் செல்லும் பாதை பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

 குறிப்பாக வருடாந்த உற்சவ காலங்களிலும் கதிர்காமம் பாதயாத்திரை நடைபெறும் நாட்களிலும் ஆயிரக்கணக்கான மூவின பக்தர்களும்  இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றனர்.

எனினும், உகந்தமலை ஆலயத்திற்கான திசை நிர்ணய அறிவிப்பு பலகை இல்லாத காரணத்தால் வெளிமாவட்டங்களிலிருந்து வருவோர் மற்றும் முதல் முறையாக வருகை தரும் யாத்திரிகர்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், பாணமை சந்தியில் இருந்து உகந்தமலை முருகன் ஆலயத்திற்கான வீதி அறிவித்தல் பலகையை உடனடியாக நிறுவ நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளரும் சமய ஆர்வலருமான கண.இராசரத்தினம் (கண்ணன்) கூறுகையில்..  பாணமைச் சந்தியில் மாத்திரம் அல்ல, அதனை அடுத்து  வருகின்ற கண்ணகை அம்மன் கோயில் சந்தியிலும் கூமுனை சந்தியிலும் இதனை நிறுவினால் மக்களுக்கு பேர் உதவியாக இருக்கும் என்றார்.