மட்டக்களப்பில் அதிரடி: 5 மதுபானசாலைகள் முற்றுகை, பெருமளவு மதுபானங்கள் பறிமுதல்!

 


கொழும்பில் இருந்து வருகை தந்த விசேட பொலிஸ் குழுவினர், புதன்கிழமை (01) மாலை மட்டக்களப்பிலுள்ள பல மதுபானசாலைகளை அதிரடியாக முற்றுகையிட்டு சோதனையிட்டனர். இதன்போது சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான மதுபானப் பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த விசேட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோத மதுபானங்கள் அதிகளவில் மட்டக்களப்பில் இருந்தே விநியோகிக்கப்படுவதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத்கவலின் அடிப்படையிலேயே இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து மதுபான விற்பனை நிலையங்கள் இதன்போது முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட மதுபானங்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மதுவரித் திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக சோதனையில் ஈடுபட்ட விசேட பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.