தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம் ( 30.07.2026 )ஆம் திகதி இன்று காலை வெகுவிமர்சையாக நிறைவு பெற்றது!











​கிழக்கிலங்கையின் வரலாற்றுப் பெருமை கொண்ட தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, புதன் கிழமை 29ஆம் நாள் திருவிழா மிகச் சிறப்பாகவும் பக்திப் பெருக்குடனும் நடைபெற்றது. ​விழா நாளன்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்கார உற்சவம் சிறப்பாக இடம்பெற்றதுடன், தொடர்ந்து வசந்த மண்டபத்தில் சிறப்புப் பூஜைகளும் நைவேத்தியங்களும் நிறைவேற்றப்பட்டன. ​அதனைத் தொடர்ந்து, வள்ளி தெய்வானை சமேதராக முருகப்பெருமான், விநாயகப் பெருமான் மற்றும் தாய்-தந்தையரான பரமசிவன்-பார்வதி ஆகியோருடன் எழுந்தருளி வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம் 30 ஆம் திகதி இன்று வெகுவிமர்சையாக நிறைவு பெற்றது! கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்கதும், பக்தர்களால் "சின்னக் கதிர்காமம்" எனப் போற்றி வழிபடப்படுவதுமான தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்த்தோற்சவத் திருவிழா இன்று காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது. ​கடந்த சில தினங்களாகப் பாரம்பரிய முறைப்படியும் ஆகம சம்பிரதாயங்களின்படியும் சிறப்பாக நடைபெற்று வந்த வருடாந்த திருவிழாக்களின் தொடர்ச்சியாக, இன்று அதிகாலை வேளையில் மூல மூர்த்திக்கும், வசந்த மண்டபப் பெருமானுக்கும் விசேட அபிஷேக மற்றும் ஆராதனைகள் இடம்பெற்றன. ​தொடர்ந்து நடைபெற்ற வசந்த மண்டபப் பூஜைகளைத் தொடர்ந்து, ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகன் விசேடமாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி தீர்த்தக் கேணியை அடைந்தார். ​சிவாச்சாரியார்களின் வேதபாராயண முழக்கங்கள் மற்றும் பக்தர்களின் "அரோகரா" கோஷங்களுக்கு மத்தியில், சிவாகம முறைப்படி வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.