சைவ நெறிக்கூடத்தின் ஏழாவது ஆலயம் 2 கோடிரூபா செலவில் நுவரெலியா லிந்துலையில்.. தனித் தமிழில் கும்பாபிஷேகம்!

 

















( வி.ரி. சகாதேவராஜா)

சைவ நெறிக்கூடத்தின் 07 வது ஆலயம் 2 கோடி ரூபாய் செலவில் நுவரெலியா லிந்துலை பம்பரகல குட்டிமலை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
அதன் திருக்குடமுழுக்கு  கும்பாபிஷேகம்


நேற்று முன்தினம் (12)ஞாயிற்றுக்கிழமை  சைவநெறிக்கூட சிவஞான சித்தர் பீடத்தின் நிறுவுனர் சிவத்திரு யோகன் ஐயா தலைமையில் தனித் தமிழில் சிறப்பாக நடைபெற்றது.

1989 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக சுவிட்சர்லாந்தில் அகதிகளாக வாழத் தொடங்கிய ஈழத் தமிழ் இளைஞர்கள் சிலர், தமது வாழ்க்கையை மட்டுமன்றி தமிழையும் சைவத்தையும் உலகளவில் வளர்க்க வேண்டும் என்ற உயரிய இலட்சியத்துடன் ஒன்றிணைந்து உருவாக்கிய அமைப்பே சைவநெறிக்கூடம் ஆகும்.

திரு.தர்மலிங்கம் சசிகுமார் அவர்கள் உள்ளிட்ட ஒன்பது இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பின் தலைமையகம் சுவிட்சர்லாந்தில் இயங்கி வருகிறது.

சைவநெறிக்கூடம் இதுவரை ஏழு திருக்கோவில்களை நிறுவியுள்ளது.

1. சுவிட்சர்லாந்து – பேர்ன் நகரில் ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேசுவரர் திருக்கோவில்.


2. சுவிட்சர்லாந்து – மார்த்தினி நகரில் ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேசுவரர் திருக்கோவில்.


3. லண்டன் – உச்சிமலை முருகன் திருக்கோவில்.


4. இலங்கை – யாழ்ப்பாணம், இணுவில் நகரில் ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேசுவரர் திருக்கோவில்.


5. இலங்கை – அம்பாறை மாவட்டம், வளத்தாப்பிட்டி பளவெளி கிராமத்தில் ஆதிசக்தி உடனாய ஆதிசிவன் திருக்கோவில்.


6. டென்மார்க்கில் அமைக்கப்பட்ட திருக்கோவில்.


7. தற்போது நுவரெலியா மாவட்டம், லிந்துலை – நாகசேனை, பம்பரகல, குட்டிமலை ஞானாம்பிகை உடனாயே இராச ராசேச்சுவரர் திருக்கோவில்.


குடமுழுக்கு விழாவில் சுவிட்சர்லாந்து, லண்டன், கனடா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.

அத்துடன் சைவ நெறிக்கூடம் ஈழத்தின் சித்தர்களை ஒன்று சேர்க்கும் பணியையும் செய்து வருவதுடன் அதன்  தலைவராக இருந்து செயல்படும் சுவிஸ் நாட்டில் வாழும் சிவயோகநாதன் ஐயா  அதே போன்று யாழ்ப்பாணம் இனுவில் பிரதேசத்தில் வாழும் பாபா சித்தர் என செல்லமாக அழைக்கப்படும் அர்சுனர் சுவாமி அவர்களும் இங்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது என்பதுடன் எதிர்காலத்தில் ஈழத்து சித்தர்கள் ஒன்று சேரும் ஒரு சித்தர் பீடமாக  இவ்வாலயம் அமைய இருப்பதும் குறிப்பிடத்தக்கது

சைவநெறிக்கூடத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் தர்மலிங்கம் சசிகுமார்  உரையாற்றுகையில்,

«“தமிழையும் சைவத்தையும் உலகெங்கும் வளர்ப்பதே எங்கள் இலட்சியம். வெளிநாடுகளில் வாழும் இளைஞர்களை நல்வழிப்படுத்துவதிலும், சமய நல்லிணக்கத்தையும் மனிதநேயத்தையும் வளர்ப்பதிலும் சைவநெறிக்கூடம் தொடர்ந்து பங்காற்றி வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்களும் தொண்டர்களும் இன்று இந்தப் பணியில் இணைந்துள்ளனர்,” என்றார்.
சைவ நெறிக்கூடத்தின் இளையோர் மன்றத்தின்  இணைப்பாளர் வழக்கறிஞர் செல்வி லட்சுமணன் லாவண்யா அவர்கள்  பின்வரும் கருத்தை முன் வைத்தார்.

சைவநெறிக்கூடம் 
உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தமிழ் இளையோர்களையும்ஒன்று சேர்த்து ஒருமித்த அடுத்த தலைமுறைகளாக பயணிக்கவும்  வேறு வேறு  நாடுகளில்  பிறந்திருந்தாலும் வளர்ந்திருந்தாலும்  தமிழால் ஒன்றுபட்டு  தமிழ் இனத்துக்கும் மொழிக்கும் மக்களுக்கும்  சேவையாற்ற இளையோர்  முன் வரவேண்டும்
எனும் அழைப்பை உலகெங்கிலும் உள்ள தமிழ் இளையோரிடம் முன் வைத்ததுப் பேசியது குறிப்பிடத்தக்கது.

சைவநெறி கூடத்தின் இன்னும் ஒரு ஆலயமான பளவெளி வளத்தாப்பிட்டி ஆதி சக்தி உடனாய ஆதி சிவன் திருக்கோவில் நிர்வாகம் சமய ஆர்வலர் வெள்ளி ஜெயச்சந்திரன் தலைமையில் மக்களும் இதில் கலந்து கொண்டனர்