மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று வியாழக்கிழமை (2) காலை 6:15 மணிக்கு ஆரம்பமானது.

 



மன்னார் மறைமாவட்ட ஆயர்  அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நிஷாந்த சாகர ஜெய மான்ன ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நேசன் அடிகளார் ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

இத்திருவிழா திருப்பலியில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், திணைக்கள தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனியும் அதனை தொடர்ந்து திருச்சொரூப ஆசியும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.