சிவகுமார் -
கண்ணகி வழிபாட்டிற்குப் பிரசித்தி பெற்ற இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள, வரலாற்றுச் சிறப்புமிக்க களுவாஞ்சிகுடி ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசி திருக்குளிர்த்திப் பெருவிழா கடந்த வாரம் பக்திப் பெருக்கோடு மிக விமரிசையாக நடைபெற்று நிறைவடைந்தது.
இந்த திருக்குளிர்த்திப் பெருவிழாவில் கிழக்கில் பல பிரதேசங்களிலும் இருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர்.
இந்த ஆண்டு திருக்குளிர்த்தி விழாவின் மிக முக்கிய மற்றும் விசேஷ அங்கமாக, பாரம்பரியமும் ஆன்மீக முக்கியத்துவமும் வாய்ந்த "நெல் குத்து சடங்கு" நன்முறையில் நடைபெற்றது.
களுவாஞ்சிகுடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த (கவுத்தன்குடி) பெண்கள் அனைவரும் ஆலய முற்றத்தில் ஒன்றுகூடினர்.
நவீன காலத்திலும் நம் தொன்மத்தை மறவாமல், பாரம்பரியமான முறையில் உலக்கைகளைப் பயன்படுத்தி அவர்கள் நெல் குத்தினர்.
பெண்கள் நெல் குத்தும் போது, அம்மனின் புகழைப் பாடும் குளிர்த்திப் பாடல்களும், பக்திப் பாடல்களும் ஆலய மெங்கும் ஒலித்து பக்தர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தின.
தமிழர் பாரம்பரிய உடைகளுடன் பெண்கள் , ஒரே தாள லயத்தில் உலக்கைகளைக் கொண்டு நெல் குத்திய அந்தக் காட்சி, அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் கண்களுக்குக் கொள்ளை அழகாகவும், ஆன்மீக அதிர்வை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருந்தது.
கிழக்கு மண்ணின் பண்பாட்டையும், கண்ணகி வழிபாட்டின் தொன்மையையும் பறைசாற்றும் வகையில் அமைந்த இவ்வருட வைகாசித் திருக்குளிர்த்தி விழா, வழமை போல் இம்முறையும் பக்திப் பரவசத்துடன் இனிதே நிறைவுற்றது.












































