கணினி உலகில் புதிய புரட்சி ஆரம்பம்

 


செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களை மடிக்கணினிகள் (Laptops) மற்றும் கணினிகளில் (Desktops) நேரடியாகச் செயற்படுத்தக்கூடிய புதிய சிப் ஒன்றை என்விடியா (Nvidia) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தைவானில் நடைபெறும் 'Computex' மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய என்விடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஜென்சன் ஹுவாங், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து மூன்று வருட கூட்டு முயற்சியில் இந்த 'RTX Spark' சிப் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது AI யுகத்திற்கான கணினிகளை மறுவடிவமைப்பு செய்யும் நோக்கம் கொண்டது.

தைவானின் 'MediaTek' நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த பிராசஸர், கிளவுட் கம்ப்யூட்டிங்கை (Cloud Computing) மட்டும் நம்பியிருக்காமல், கணினியிலேயே நேரடியாக சுயமாக இயங்கும் AI முகவர்களை (Autonomous AI Agents) இயக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிப் பொருத்தப்பட்ட மடிக்கணினிகள் மற்றும் கணினிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் Dell, HP, Lenovo, ASUS, மைக்ரோசாப்ட் சர்பேஸ் மற்றும் எம்எஸ்ஐ (MSI) ஆகிய நிறுவனங்கள் ஊடாக சந்தைக்கு வரவுள்ளன.

AI தொழில்நுட்பத்தால் மென்பொருள் பொறியியலாளர்களின் (Software Engineers) வேலைவாய்ப்புகள் குறையும் என்ற அச்சத்தை நிராகரித்த ஜென்சன் ஹுவாங், அது முற்றிலும் முட்டாள்தனமானது என்றும், AI தொழில்நுட்பம் பணியாளர்களின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதால் மேலும் பல மென்பொருள் பொறியியலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து என்விடியா நிறுவனத்தின் பங்குகள் 4% வரை உயர்ந்த அதேவேளை, அதற்குப் போட்டியான ஏஎம்டி (AMD), இன்டெல் (Intel) மற்றும் குவால்காம் (Qualcomm) ஆகிய நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

AI தொழில்நுட்பமானது வெறுமனே கேள்விகளுக்குப் பதிலளிக்கும் ஒரு கருவியாக இல்லாமல், முழுமையாக சுயமாக இயங்கும் முகவர்களாக மாறும் ஒரு திருப்புமுனையாக இந்த ஆண்டு அமையும் எனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.