இலங்கை அரசின் ராஜதந்திர முயற்சிகள் வெற்றி

 


உலகிலேயே மிகப்பெரிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தமான (RCEP - Regional Comprehensive Economic Partnership) அமைப்பில் இணைவதற்கான இலங்கை அரசின் ராஜதந்திர முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தனது அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து உத்தியோகபூர்வ பயணத்தை நிறைவு செய்த அமைச்சர், இந்த அமைப்பில் இணைவதற்கு அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் முழுமையான ஆதரவை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய-பசுபிக் பிராந்தியத்தின் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் 15 நாடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், உலக மக்கள் தொகை மற்றும் பொருளாதார உற்பத்தியின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய சுதந்திர வர்த்தக அமைப்பாகக் கருதப்படுகிறது.
ஆசியான் நாடுகளுடன் சீனா, ஜப்பான், தென்கொரியா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும், இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்குமிடையே நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவும் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.