மட்டக்களப்பு மயிலம்பாவெளி பகுதியில் ஏற்பட்ட நீர் குழாய் உடைப்பு காரணமாக கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள குடிநீர் விநியோகத் தடையால் ஆயிரக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்களது அன்றாட நீர் தேவைகளுக்காக வேறுமனே தேசிய நீர்வழங்கல் வடிவமைப்பு சபையை மட்டும் நம்மி இருக்காது மாற்று வழிகளை உருவாக்க வேண்டும் என ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ.நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மயிலம்பாவெளி பகுதியில் ஏற்பட்ட நீர் குழாய் வெடிப்பு காரணமாக கடந்த இரண்டு நாட்களாக செங்கலடி, ஏறாவூர், வாழைச்சேனை பகுதிகளுக்கான நீர் வினியோகம் தடைப்பட்டு மக்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறிய போது
மட்டக்களப்பு மயிலம்பாவெளி பகுதியில் ஏற்பட்ட நீர் குழாய் உடைப்பு காரணமாக கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள குடிநீர் விநியோகத் தடையால் ஆயிரக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்களது அன்றாட நீர் தேவைகளுக்காக வேறுமனே தேசிய நீர்வழங்கல் வடிவமைப்பு சபையை மட்டும் நம்மி இருக்காது மாற்று வழிகளை உருவாக்க வேண்டும்.
கடந்த இரண்டு நாட்களாக ஏறாவூர், செங்கலடி, வாழைச்சேனை பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் உள்ள குடி நீர் மற்றும் அன்றாட பாவனைக்காக நீர் இன்றி அவர்களது அன்றாட செயற்பாடுகள் மிக மோசமாக பாதிக்கப்படுள்ளது.
ஒரு மாத நீர்க்கட்டணம் தாமதமானாலே உடனடியாக நீர் இணைப்பை துண்டிக்கும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு, மயிலம்பாவெளி பகுதியில் ஏற்பட்டுள்ள பிரதான நீர்க்குழாய் வெடிப்பை 24 மணிநேரத்திற்குள் கூட சீரமைக்க முடியாத நிலை காணப்படுகிறது இது மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்டத்தின் நகர மற்றும் புறநகர் பகுதிகளில் வாழும் பெரும்பாலான மக்கள் தங்களது குடிநீர் மற்றும் அன்றாட தேவைகளுக்காக முழுமையாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையையே நம்பியுள்ளனர்.
இந்நிலையில் திடீரென ஏற்பட்டுள்ள இந்த நீர் வினியோகத் தடை, வீடுகள் மட்டுமன்றி நீரை நம்பி இயங்கும் வர்த்தக நிறுவனங்களையும்,உணவகங்களையும், சிறு கைத்தொழில் நிறுவனங்களை கடுமையாக பாதித்துள்ளது.
இன்றைய(23,24) தினம் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தங்களது நாளாந்த கடமைகளுக்குச் செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். அடிப்படைத் தேவையாக உள்ள குடி நீர் இல்லாத நிலை, மக்களின் இயல்பான வாழ்க்கை மிக மோசமாக சீர்குலைத்துள்ளது.
இந்த நிலை மேலும் சில நாட்கள் நீடித்தால், மாவட்டத்தின் அன்றாட செயற்பாடுகள் முழுமையாக முடங்கும் அபாயம் காணப்படுகிறது.
கடந்த காலங்களில் கிணறுகள் மற்றும் குழாய்க் கிணறுகளை நம்பியிருந்த பலர், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் குடி நீர் வசதி கிடைத்த பின்னர் அவற்றை பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளனர்.
இதனால் தற்போது மாற்று நீர் ஆதாரங்கள் இல்லாத நிலை உருவாகியுள்ளது.
இந்த சம்பவம் எதிர்காலத்திற்கான முக்கிய பாடமாக அமைய வேண்டும்.
குடிநீர் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக மக்கள் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையை நம்பி இருக்காது மாற்று வழிகளை உருவாக்க வேண்டும்.
நீர் வளம் நிறைந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் நீருக்காக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையை மாத்திரம் நம்பி இருந்தால் எதிர்காலத்தில் இது போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்டு நீர் வினியோகம் தடைப்பட்டால் நாம் மிக மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும்.
எனவே குடிநீரை குறைந்தது மூன்று நாட்களுக்காவது சேகரித்து வைக்க பழக வேண்டும், அதே போல் குடி நீர் தவிர்ந்த ஏனைய நீர் தேவைகளுக்கு கிணறுகள் , குழாய் கிணறுகள், மற்றும் ஏனைய நீர் பெறுவதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்ம்.
அதேவேளை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையும் தனது அவசரகால செயற்பாட்டு திறனை மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறான குழாய் உடைப்புகள் ஏற்படும் போது நவீன தொழில்நுட்பங்களையும் போதுமான வளங்களையும் பயன்படுத்தி குறுகிய காலத்திற்குள் பழுதுகளை சீரமைக்கும் திறனை அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
ஏற்கனவே பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு, மற்றும் அத்தியாவசிய பொருட்களின் அதிகரித்த செலவினங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, இத்தகைய நீர் வினியோகத் தடைகள் மேலும் ஒரு சுமையாக மாறுகின்றன.
அதேவேளை, காலம் காலமாக குடிநீர் இன்றி அவதிப்பட்டு வரும் மட்டக்களப்பு படுவான்கரை மக்களின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்பதையும் இன்றைய நீர்த்தடை அனுபவத்தின் ஊடாக நகர்ப்புற மக்களும் உணரக்கூடியதாக இருந்திருக்கும்.
எது எவ்வாறாக இருந்தாலும் மாவட்டத்தின் குடி நீர் தேவையை தடையின்றி வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாக உள்ள நிலையில் அதிகரித்த நீர் கட்டணத்தை அறவிடும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை இவ்வாறான பழுதுகள் ஏற்படும் போது நீர் வினியோகத்தை தடையின்றி வழங்குவதற்கு அனைத்து நகரங்களிலும் நீர் சேகரிப்பு தாங்கிகளை நிறுவி மக்களுக்கு தடையின்றி குடி நீரை வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
ந.குகதர்சன்





