மட்டக்களப்பில் ஆலய மோதலைத் தடுத்த முதியவரின் வீடு அடித்துச் சேதமடிப்பு: காத்தான்குடி காவல்துறையினர் விசாரணை

 






 மட்டக்களப்பு, நொச்சிமுனை பகுதியில் உள்ள முதியவர் ஒருவரின் வீடு இனந்தெரியாத நபர்களால் அடித்துச் சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நொச்சிமுனை பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றில் இரு குழுக்களுக்கிடையே மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதன்போது, அங்கிருந்த முதியவர் ஒருவர் தலையிட்டு, "ஆலய வளாகத்தில் சண்டை போடக் கூடாது" எனக் கூறி மோதலைத் தடுக்க முயன்றுள்ளார். எனினும், அந்த முட்டிமோதலின் போது அவர் கீழே தள்ளிவிடப்பட்டதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட முதியவரின் வீடு நொச்சிமுனை இசை நடனக் கல்லூரி வீதியில் அமைந்துள்ளது. சம்பவத்தன்று முதியவரும் அவரது மனைவியும் வீட்டைப் பூட்டிவிட்டு சமுர்த்தி அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர்.

இதனைப் பயன்படுத்திக் கொண்ட இருவர், கூரிய ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் அவ்விடத்திற்கு வந்துள்ளனர். வீடு பூட்டப்பட்டிருந்ததால், மதில் மேல் ஏறி குதித்து உள்ளே நுழைந்த அவர்கள், வீட்டின் கதவை உடைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், வீட்டின் ஜன்னல்கள் மற்றும் அலமாரிகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

சமுர்த்தி அலுவலகம் சென்றுவிட்டு வீடு திரும்பிய தம்பதியினர், தங்களது வீடு உடைத்துச் சேதமாக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர். அந்த வீதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

  தற்போது தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகளைக் காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.