சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் உயிர்மருத்துவ பொறியியல் சேவை மையம், கொரியா சர்வதேச சுகாதார சேவை அறக்கட்டளையின் நிதி உதவியுடன் முழுமையாக நவீனமயமாக்கப்பட்டுள்ளது. இதன் உத்தியோகபூர்வ பணிகள் ஆரம்பம் மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா (16) முற்பகல் கொழும்பில் உள்ள BES கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
அதிநவீன வசதிகள் மற்றும் புதிய கேட்போர் கூடம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு மேம்பாடுகளுக்காக ரூ. 501 மில்லியனுக்கும் அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது.
மத்திய, வடமத்திய, வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் தென்னிலங்கை மாகாண சபைகளின் கீழ் உள்ள உயிர்மருத்துவ பொறியியல் சேவை அலகுகளுக்கு, பொறியியல் கருவிகள் மற்றும் மருத்துவப் பரிசோதனை உபகரணங்களை வழங்குவதற்காக ரூ. 228 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் ,சுகாதார பிரதி அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேமுனி, இலங்கைக்கான கொரியக் குடியரசு தூதுவர் மியோன் லீ, கொரியா சர்வதேச சுகாதார சேவை அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் பெக் குவான்-பெக் , சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க மற்றும் KOICA, Korea Exim Bank, Saemaul Foundation ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஆகிய முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்:
இந்த மேம்படுத்தப்பட்ட மையத்தின் மூலம் இலங்கையின் பொது சுகாதாரத் துறையில் பயன்படுத்தப்படும் அதிநவீன மருத்துவ உபகரணங்களின் தரம் மற்றும் பழுதுபார்ப்புப் பணிகள் மிகவும் துரிதமாக முன்னெடுக்கப்படும். அத்துடன், புதிய தொழில்நுட்ப வசதிகள் மூலம் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான குறுகிய கால பயிற்சிப் படிப்புகளும், மருத்துவ உபகரணப் பட்டியலை டிஜிட்டல் முறையில் நிர்வகிக்கும் புதிய அமைப்பும் இதன் கீழ் நிறுவப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





