இலங்கையில்
நிலவும் பல்முக வறுமையை ஒழித்து, கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும்
நோக்கில், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை
அமைச்சின் அனுசரணையுடன் "ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்"
எனும் புதிய தேசிய செயற்திட்டம் நாடளாவிய ரீதியில் உத்தியோகபூர்வமாக
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மக்களின்
வரிப்பணத்திலிருந்து 25,000 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில்
முன்னெடுக்கப்படும் இப் பாரிய செயற்திட்டம் ஜூன் மாதம் 02ஆம் திகதி
நாடளாவிய ரீதியில் உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
இதன்
கீழ், அம்பாறை மாவட்டத்தின் முதலாவது பிரதான ஆரம்ப நிகழ்வு நேற்று (02)
சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வீரமுனை சுவீஸ் கிராண்ட்
மஹால் மண்டபத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் மிகச்
சிறப்பாக நடைபெற்றது.
அம்பாறை
மாவட்டத்தின் பிரதான தொடக்க நிகழ்வாக, சம்மாந்துறை பிரதேச செயலகப்
பிரிவுக்குட்பட்ட வீரமுனை கிராமத்தின் நான்கு கிராம உத்தியோகத்தர்
பிரிவுகளையும் உள்ளடக்கிய பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும்
வேலைத்திட்டம் இதன்போது முன்னெடுக்கப்பட்டது.
பாரம்பரிய
கைத்தொழில்துறையை நவீனமயப்படுத்தி, பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை
ஊக்குவிக்கும் நோக்கில், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அரை-தானியங்கி
கைத்தறி இயந்திரங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களை
வழங்குவதற்காக, குறித்த சங்கத்திற்கான உத்தியோகபூர்வ அனுமதி மற்றும்
கையளிப்புப் பத்திரம் இதன்போது உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில்
கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டுகை பிரதி அமைச்சர் வசந்த
பியதிஸ்ஸ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், கௌரவ அதிதியாக
கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.
ஆதம்பாவா கலந்துகொண்டார்.
மேலும், அம்பாறை மாவட்ட
செயலாளர் அனுபமா மங்கள விக்கிரமாராச்சி, சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர்
ஐ.எல்.எம் மாஹீர், மாவட்ட பிரதம கணக்காளர் ஏ.எல். மஹ்ரூப், மாவட்ட
திட்டமிடல் பணிப்பாளர் ஏ.பி. முனாஸீர், மாவட்ட கணக்காளர் ஐ.எம். பாரீஸ்
மற்றும் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல் முஹம்மது
அஸ்லம்.சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும் கிளின் ஸ்ரீ்லங்கா
நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளருமான வை.பி.எம் நவாஸ்,அரசாங்க உயர்
அதிகாரிகள்,பிரஜா சக்தி சமூக அபிவிருத்தி குழு தவிசாளர்கள் மற்றும்
பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
( வி.ரி. சகாதேவராஜா)












