நாட்டில் டெங்கு நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ள சூழ்நிலையில், அரசாங்கத்துடனான தங்களது நீண்டகால பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு காணப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் தேசிய சங்கம் தெரிவித்துள்ளது.
தங்களது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய முறையில் பதிலளிக்கத் தவறியமையால், இன்று (30) செவ்வாய்க்கிழமை முதல் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளில் இருந்தும் முழுமையாக விலகப் போவதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் தேசிய சங்கம், கிராம உத்தியோகத்தர் மற்றும் அனர்த்த முகாமைத்து உத்தியோகத்தர்களின் ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இது குறித்து நேற்று (29) ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிராம உத்தியோகத்தர் அதிகாரிகளின் தொழிற்சங்க கூட்டணியின் தேசிய அமைப்பாளர் புத்திக ரங்கன, தங்களது அதிகாரப்பூர்வ பயணச்செலவுகளை ஈடுசெய்வதற்கான போதுமான எரிபொருள் கொடுப்பனவு மற்றும் கடமைகளை மேற்கொள்வதற்கு தேவையான ஏனைய வசதிகள் போன்ற நியாயமான கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து திருப்திகரமான பதில் எதுவும் கிடைக்கவில்லை.
டெங்கு நோய் வேகமாகப் பரவி வரும் தற்போதைய சூழலில், அதிக ஆபத்துள்ள பகுதிகள் என்று அடையாளம் காணப்பட்டு 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும், தங்களுக்கு இந்த தொழிற்சங்க நடவடிக்கையைத் தவிர வேறு வழியில்லை. தற்போது திட்டமிட்டுள்ளவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டால் டெங்கு நோய் கட்டுப்பாட்டுக் கடமைகளில் இருந்தும் தாங்கள் விலக நேரிடும்.
இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 51,049 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதில் ஜூன் மாதத்தில் மாத்திரம் 17,208 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். தற்போதைய நிலையில் டெங்கு தொற்றினால் ஏற்படும் மரண வீதம் 0.06 சதவீதமாகக் காணப்படுவதுடன் மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேலும், நாடளாவிய ரீதியில் 124 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு பரவும் அதிஅபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள சூழலில், கிராம உத்தியோகத்தர்களின் இந்த தற்காலிக பணிப்புறக்கணிப்பு காரணமாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நுளம்பு பெருகும் இடங்களை அழிக்கும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், கள ஆய்வுகள் மற்றும் விழிப்புணர்வு திட்டங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த டெங்கு தடுப்பு பிரச்சாரங்களும் கடுமையாக பாதிக்கப்படும்.





