லயஞான குபேரபூபதி, தவில் மேதை திரு. தெட்சிணாமூர்த்திப் பிள்ளை அவர்களுடன் இணைந்து நிகழ்த்திய கச்சேரிகளின் ஒலிப்பதிவுகளை நாம் உற்றுக் கேட்கும்போது, ஒரு மகத்தான இசை வரலாறு நம் முன்னே விரிகிறது.
திரு. சின்னராசா பிள்ளை அவர்களின் தனித்துவமான தவில் வாசிப்பு, லய கணக்குகளின் நுட்பம் ஆகியவை திரு. தெட்சிணாமூர்த்திப் பிள்ளை அவர்களின் கற்பனைத் திறனுக்கு உத்வேகம் அளித்து, அவரை மணிக்கணக்கில் வாசிக்கச் செய்த பெருமைக்குரியவை என இரத்தினவேல் கேதீஸ்வரன் அவர்கள் “தமிழர் செவ்வியல் இசையும் நாகசுர தவில் நிகழ்த்துகையும்” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இது சின்னராசா பிள்ளை அவர்களின் இசை ஆளுமைக்கும், லயஞானத்திற்கும் கிடைத்துள்ள மிகச்சிறந்த சான்றாகும்.
இத்தகைய பெருமைமிக்க இசைப் பாரம்பரியம் ஒரு தலைமுறையுடன் நின்றுவிடாமல், தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நடேசன் → ரத்தினம் → சோமசுந்தரம் என்கிற சின்னராசா → சுதாகரன் → அபினேசன்.
இவ்வாறு ஐந்து தலைமுறைகளாகத் தவில் இசையைத் தங்களது வாழ்வின் அடையாளமாகக் கொண்டு, அதன் மரபையும் மாண்பையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
மூத்த தலைமுறையினர் உருவாக்கிய இசைச் செல்வத்தையும், வாசிப்பு நுட்பங்களையும், லயப் பாரம்பரியத்தையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதே இந்த மரபின் மிகப்பெரிய சிறப்பு. அந்த வகையில், ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்த இளம் தவில் கலைஞர் அபினேசன், முன்னோர்களின் இசை மரபைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.
இது வெறும் ஐந்து தலைமுறைகளின் வரலாறு மட்டுமல்ல, காலம் கடந்து ஒலிக்கும் ஒரு குடும்பத்தின் தவில் இசை மரபும், கலைக்கான அர்ப்பணிப்பும் ஆகும்!






