மட்டக்களப்பு புனர்வாழ்வு நிலையத்தில் சிகிச்சை பெற்ற 30 பேர் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

 



 மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சி கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள போதைப்பொருள் ஒழிப்பு புனர்வாழ்வு நிலையத்தில் 14 நாட்கள் சிகிச்சையினை வெற்றிகரமாக நிறைவு செய்துகொண்ட 30 பேர், நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் சம்பிரதாயபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வு நேற்றைய தினம் (02) நடைபெற்றது.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையினால், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான இந்த புனர்வாழ்வு இடைத்தங்கல் நிலையம் கடந்த மே மாதம் 20ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. அதன் முதற்கட்டமாகவே இந்த 30 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

  •  புனர்வாழ்வு நிலையத்தின் பொறுப்பதிகாரியும், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மாவட்ட இணைப்பாளருமான ப. டினேஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், 14 நாட்கள் தங்கியிருந்து வெற்றிகரமாக சிகிச்சையை முடித்துக் கொண்டவர்கள் நற்சான்றிதழ்களுடன் மீண்டும் சமூகத்தில் இணைக்கும் நோக்கில் அவர்களின் உறவினர்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டனர்.