மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்ப கல்லூரியின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம் -2026.06.04

 










மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தத் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் நோக்கில், "உதிரம் கொடுப்போம், உயிரைக் காப்போம்" என்ற உன்னதமான தொனிப்பொருளில் பாரிய இரத்ததான முகாமொன்று இன்று (04.06.2026) வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், லண்டனைச் சேர்ந்த சிரேஷ்ட வைத்தியர் திருமதி காந்தா நிரஞ்சன் அவர்களின் பூரண அனுசரணையில் இந்த முகாம் நடைபெற்றது.

    "தமிழர் பாரம்பரிய முறைப்படி குத்துவிளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இந்த இரத்ததான முகாம், மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்தியர் சஞ்சிதா தலைமையிலான மருத்துவக் குழுவினர் குருதிச் சேகரிப்புப் பணிகளை மேற்கொண்டதுடன், இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குருதிக்கொடையினை ஆர்வத்துடன் வழங்கினர்."

இந்நிகழ்வில் தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் சோமசூரியன், நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் பொறியியலாளர் தயாளசீலன் மயூரன் (JP) மற்றும் மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     வைத்தியசாலைகளில் நிலவும் இரத்தத் தட்டுப்பாடு என்பது அவசர சிகிச்சையில் இருக்கும் பல உயிர்களைப் பாதிக்கும் ஒரு தீவிரமான பிரச்சினையாகும். இத்தகைய சூழலில், பொதுமக்களையும் இளைஞர்களையும் ஒன்றிணைத்து குருதிக்கொடை வழங்க முன்வந்த தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் ஒன்றியத்தினருக்கும், அதற்குப் பூரண ஒத்துழைப்பு வழங்கிய கல்லூரி அதிபர் சோமசூரியன்  ஆகியோரின்  இந்தச் சேவை சமூகத்திற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகும்.

தன்னார்வத்துடன் முன்வந்து குருதிக்கொடை வழங்கிய அனைத்துப் பொதுமக்களுக்கும், அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மருத்துவக் குழுவினருக்கும் எமது ஊடகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.