192 பதில் உப அஞ்சல் அதிபர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கும் நிகழ்வு,

 


இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் 192 பதில் உப அஞ்சல் அதிபர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கும் நிகழ்வு, நாளை (18) கொழும்பு அஞ்சல் தலைமையகத்தில் நடைபெறவுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வு சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெறவுள்ளது.

நாட்டின் கிராமப்புற மற்றும் தூரப் பிரதேச மக்களுக்கான அஞ்சல் மற்றும் நிதிச் சேவைகளை இலகுவாக்கும் நோக்கில், உப அஞ்சல் அலுவலக அமைப்பின் மனித வளத்தை வலுப்படுத்த தற்போதைய அரசாங்கத்தின் வழிகாட்டலின் கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு முதல் பதில் கடமையாற்றிய அதிகாரிகள் இவ்வாறு நிரந்தரமாக்கப்படுகின்றனர்.

அமைச்சரவை பத்திரத்திற்கு அமைவாக, 2020 ஒக்டோபர் 15க்கு முன்னர் பதில் கடமையில் ஈடுபட்டிருந்த 196 பேரில் தகைமை பெற்ற 192 பேருக்கே இந்த ஓய்வூதியத்துடனான நிரந்தர நியமனங்கள் வழங்கப்படுகின்றன.

உப அஞ்சல் அலுவலகங்களுக்காக அஞ்சல் அதிபர்களால் பெறப்படும் கட்டிடங்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட 1,500 ரூபா கொடுப்பனவு, 2025 ஏப்ரல் 01 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 7,500 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

1921ஆம் ஆண்டில் 06 உப அஞ்சல் அலுவலகங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை, தற்போது நாடு முழுவதும் 3,410 அலுவலகங்கள் வரை விரிவடைந்துள்ளது என்று அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.