பாடசாலைத் தவணைகள் மற்றும் பொதுப் பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, வரும் 2027ஆம் ஆண்டு முதல், கடந்த 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த பழைய கால அட்டவணையின்படியே கல்விப் பொதுப் பரீட்சைகளும், பாடசாலைத் தவணைகளும் நடத்தப்படவுள்ளன.
இந்தத் தகவலைக் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டில் நாடு எதிர்கொண்ட பெருந்தொற்று காரணமாகக் கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சை கால அட்டவணைகளில் பாரிய குழப்பம் ஏற்பட்டது.
அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்துச் சிரமங்கள் காரணமாகப் பாடசாலைகளை அடிக்கடி மூட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இவ்வாறான தொடர்ச்சியான சவால்களால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதை கருத்திற்கொண்டே, கல்வி அமைச்சு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
புதிய மாற்றங்கள் (2027 ஆம் ஆண்டு முதல்):
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை (O/L): வழக்கம்போல டிசம்பர் மாதத்தில் நடைபெறும்.
க.பொ.த. உயர்தரப் பரீட்சை (A/L): வழக்கம்போல ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும்.
பாடசாலை விடுமுறைகளில் மாற்றம்:
இந்த வழக்கமான கால அட்டவணைக்குத் தடையின்றி மாறுவதற்காக, இந்த வருடத்தின் (2026) எஞ்சியுள்ள இரண்டு பாடசாலைத் தவணைகளின் போதும் மாணவர்களுக்கு நீண்ட விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





