ஈரானின் இராணுவ நிலைகளை இலக்கு வைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) அறிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை கடந்து சென்ற அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை, ட்ரோன் மற்றும் சிறிய படகுத் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க கடற்படையின் ஏவுகணை அழிப்புக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக ஓமான் வளைகுடாவை நோக்கிச் சென்றபோது, ஈரான் நடத்திய தாக்குதல்களை இடைமறித்து, தற்காப்புக்காக இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன்போது, ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் ஏவுதளங்கள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், உளவு மற்றும் கண்காணிப்பு நிலையங்கள் ஆகியவையே அமெரிக்காவின் முக்கிய இலக்குகளாக கருதப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் USS Truxtun, USS Rafael Peralta மற்றும் USS Mason ஆகிய கப்பல்கள் சர்வதேச கடல் வழியைக் கடந்தபோது இந்தத் தாக்குதல் முயற்சி இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, தாங்கள் மோதலைத் தீவிரப்படுத்த விரும்பவில்லை என்றும், அதேநேரம் அமெரிக்கப் படைகளைப் பாதுகாப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் அறிவித்துள்ளது.





