பொதுமக்களுக்கும் பாதசாரிகளுக்கும் இடையூறு விளைவிக்கும் சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றும் விசேட அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.








கோறளைப்பற்று வாழைச்சேனை  பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும் பாதசாரிகளுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றும் விசேட அதிரடி நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

​வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை 206A ஸம் ஸம் வீதியில், பல வீடுகளின் நுழைவாயில் கதவுகளுடன் (Gate) சேர்த்து, வீதி வரை நீட்டித்து அனுமதியின்றி படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் அவ்வீதியால் செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன நெரிசல்கள் ஏற்பட்டு பெரும் அசெளகரியங்கள் நிலவி வந்தன.

​இது குறித்துக் கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து, கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன் அவர்களின் தலைமையில்  நேரடியாக கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

வீதியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகள் அனைத்தும் தவிசாளரின் முன்னிலையில் உடனடியாக அகற்றப்பட்டதுடன்.

​சிதைவடைந்த வீதிப் பகுதிகளைச் செப்பனிடும் பணிகளும் தவிசாளரின் வழிகாட்டலில் உடனே ஆரம்பித்து வைக்கப்பட்டன.

​இந்த நடவடிக்கையின் போது கருத்துத் தெரிவித்த தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன்

​"பிரதேச சபையின் முறையான அனுமதி இன்றி வீதிகளை ஆக்கிரமித்து எவ்வித கட்டுமானங்களையும் முன்னெடுக்கக் கூடாது. இனிவரும் காலங்களில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

 பொதுமக்கள் தங்களது எல்லைக்குள் நின்றவாறு ஏனையவர்களுக்கு, குறிப்பாக பாதசாரிகளுக்கு இடையூறு இல்லாமல் கட்டுமானங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்," என வேண்டுகோள் விடுத்தார்.

 

  ந குகதர்சன்